அப்போது, 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை விடுவிப்பதில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களிடம் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுவதாக பல்வேறு எம்பிக்கள் குற்றம்சாட்டினர். இது குறித்து திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்பி பேசுகையில், ‘‘100 நாள் வேலை திட்டத்தில் கடந்த 5 மாதங்களுக்கான நிலுவைத் தொகை ரூ.4,034 கோடி தமிழ்நாட்டிற்கு தரப்பட வேண்டி உள்ளது. இத்திட்டத்தில் நிதிவிடுவிப்பு 15 நாட்களுக்கு மேல் அதிகரித்தால் தொழிலாளர்களுக்கு வட்டி வழங்கப்பட வேண்டும்.
எனவே நிலுவைத் தொகையை விடுவிக்க வலியுறுத்தி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு ஏற்கனவே கடிதம் எழுதி உள்ளார். நாங்களும் அமைச்சர்களை சந்தித்து முறையிட்ட போது, விரைவில் விடுவிப்பதாக உறுதி அளித்தனர். ஆனால் இன்னமும் நிலுவைத் தொகை தரப்படவில்லை. நிதியை வழங்குவதில் ஒன்றிய அரசு பாரபட்சமாக நடந்து கொள்கிறது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தில் 76 லட்சம் குடும்பங்களை சேர்ந்த 91 லட்சம் தொழிலாளர்கள் பயனடைகின்றனர்.
இதில் 86 சதவீதம் பேர் பெண்கள், சுமார் 1 லட்சம் மாற்றுத்திறனாளி தொழிலாளர்களும் பணி செய்கின்றனர்’’ என்றார். கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி அடூர் பிரகாஷ் பேசுகையில், ‘‘எங்கள் மாநிலத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து சரிகிறது. இதற்கு தாமதமான ஊதிய மற்றும் குறைந்த ஊதியமே காரணம். கேரளாவுக்கு கடந்த 3 மாதங்களுக்கான ஊதியம் தரப்படவில்லை.
இத்திட்டத்தின் கீழ் ரூ. 811 கோடி நிலுவைத் தொகை உள்ளது. 100 நாள் வேலை திட்ட நாட்களை 150 ஆக அதிகரிக்க வேண்டுமென நாடாளுமன்ற நிலைக்குழுவும் பரிந்துரைத்துள்ளது. நிலுவையில் உள்ள தொகையை அரசு தாமதமின்றி வழங்குமா?’’ என கேள்வி எழுப்பினார். இதே போல, மேற்கு வங்கமும் இத்திட்டத்தில் ஒன்றிய அரசால் வஞ்சிக்கப்படுவதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் குரல் எழுப்பினர்.
இதற்கு பதிலளித்து ஒன்றிய கிராமப்புற வளர்ச்சித் துறை இணை அமைச்சர் சந்திர சேகர் பெம்மாசானி பேசியதாவது: கடந்த ஆண்டு கர்நாடகாவுக்கு ரூ.3,500 கோடி வழங்கப்பட்டுள்ளது. நிதி விடுவிப்பு தொடர்ச்சியான செயல்முறை. எனவே இன்னும் சில வாரங்களில் நிலுவைத் தொகை வழங்கப்படும். இந்த ஆண்டும் கேரளாவுக்கு ரூ.3,000 கோடி வரையிலும் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்த வரையில், ரூ.7,300 கோடி நிதி விடுவிக்கப்பட்டு விட்டது.
7 கோடி மக்கள்தொகை கொண்ட தமிழ்நாடு ஆண்டுக்கு ரூ.10,000 கோடி நிதியை பெறுகிறது. அதுவே 20 கோடி மக்கள்தொகை கொண்டு உபிக்கும் அதே அளவு நிதி தரப்படுகிறது. 15 நாட்களுக்கு மேல் நிதி வழங்க தாமதமாகும் பட்சத்தில் மாநில அரசு அத்தொகையை செலுத்திவிட்டு பின்னர் ஒன்றிய அரசிடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். மேற்கு வங்கத்தில் இத்திட்டத்தில் நிறைய முறைகேடுகள் நடந்துள்ளன. பணிகளை தணிக்கை செய்ததில் 44 பணிகளில் தவறு நடந்துள்ளது.
சில விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டி உள்ளது. அவை முடிந்ததும், மாநில அமைச்சருடன் ஒன்றிய அமைச்சர் கலந்து பேசி நிலுவைத் தொகை விடுவிக்கப்படும். இத்திட்டத்தில் எந்த மாநிலத்தையும் ஒன்றிய அரசு பாரபட்சமாக நடத்தவில்லை. 2013-14ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 43 சதவீதம் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. அரியானாவில் அதிகபட்சமாக ஒருநாள் சம்பளம் ரூ.374 தரப்படுகிறது. கேரளா, கர்நாடகாவில் ரூ.350 தரப்படுகிறது.
எனவே குறைந்த சம்பளம், ஊதிய உயர்வுஇல்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறு கூறினார். ஒன்றிய வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் பேசுகையில், ‘‘தமிழ்நாடாக இருந்தாலும், மேற்கு வங்கமாக இருந்தாலும் அனைத்து மாநிலங்களும் எங்களுக்கு ஒன்று தான். மோடி அரசு எந்த பாரபட்சமும் காட்டவில்லை.
நிலுவைத் தொகை அனைத்தும் விரைவில் விடுவிக்கப்படும்’’ என்றார். அமைச்சர்களின் பதிலில் அதிருப்தி அடைந்த திரிணாமுல் காங்கிரஸ், கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பிக்கள் மற்றும் திமுக எம்பிக்கள் அவையின் மையப்பகுதியை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை 12 மணி வரை சுமார் 15 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது.
* காங். எம்பிக்கள் போராட்டம் ராகுல், பிரியங்கா பங்கேற்பு
மக்களவை ஒத்திவைக்கப்பட்டதும், 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் புறக்கணிக்கப்படுவதையும், அவர்களுக்கான ஊதியத்தை அதிகரிக்கக் கோரியும் கேரள காங்கிரஸ் எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் மூத்த தலைவர்கள் கே.சி. வேணுகோபால், சசிதரூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் பிரியங்கா காந்தி அளித்த பேட்டியில், ‘‘ஒன்றிய அரசின் செயல்படாத அணுகுமுறையால் பல லட்சம் குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து, மேலும் ஏழ்மையில் தள்ளபட்டு பாதிக்கப்படுகின்றனர். இதில் ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து நீண்ட காலமாக தரப்படாத நிலுவைத் தொகையை விரைந்து விடுவிக்க வேண்டும்’’ என்றார்.
The post 100 நாள் வேலை திட்ட நிதி விடுவிப்பில் பாரபட்சம் தமிழ்நாட்டின் ரூ.4,034 கோடி நிலுவை தொகை என்னாச்சு? மக்களவையில் திமுக கேள்வி appeared first on Dinakaran.