சென்னை: பாரதிராஜா மகனும், நடிகருமான மனோஜ் நேற்றிரவு மாரடைப்பு ஏற்பட்டு திடீரென்று மரணம் அடைந்தார். அவரது மறைவு திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான பாரதிராஜா, சந்திரலீலா தம்பதியின் மகன் மனோஜ், மகள் ஜனனி. கடந்த 1976 செப்டம்பர் 11ம் தேதி பிறந்த மனோஜுக்கு 48 வயதாகிறது. திடீரென்று ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த டாக்டர்கள், உடனே இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்கள்.
இதையடுத்து கடந்த வாரம் சென்னை அமைந்தகரையில் இருக்கும் மருத்துவமனையில் மனோஜுக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தது. இந்நிலையில், சென்னை சேத்பட் ஹாரிங்டன் ரோட்டிலுள்ள வீட்டில் இருந்த மனோஜுக்கு நேற்றிரவு மாரடைப்பு ஏற்பட்டு திடீரென்று மரணம் அடைந்தார். அவரது மறைவுச்செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மனோஜ் தனது சிறுவயதில் தனது தந்தை பாரதிராஜா இயக்கிய சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். நடிப்பு மற்றும் இசையார்வம் கொண்ட அவர், தெற்கு புளோரிடா பல்கலைக்கழகத்தில் திரைப்பட இயக்கம் மற்றும் தயாரிப்பு குறித்த படிப்பை முடித்தார். பிறகு சென்னைக்கு வந்த அவர், இயக்குனர் மணிரத்னத்தின் படங்களிலும், பாரதிராஜா இயக்கிய படங்களிலும் உதவி இயக்குனராக பணியாற்றினார். பிறகு ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘எந்திரன்’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.
கடந்த 1999ல் பாரதிராஜா இயக்கிய ‘தாஜ்மஹால்’ என்ற தமிழ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மனோஜ், தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜூனா, வருஷமெல்லாம் வசந்தம், பல்லவன், ஈர நிலம், மகா நடிகன், சாதுரியன், அன்னக்கொடி, பேபி, கதிர்வேல் காக்க, என்னமா… கத வுடுறானுங்க…!, வாய்மை, சாம்பியன், ஈஸ்வரன், மாநாடு, விருமன் ஆகிய படங்களில் நடித்தார். ஹீரோவாகவும், குணச்சித்திர வேடங்களிலும், வில்லனாகவும் நடித்த அவர், ‘தாஜ்மஹால்’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியிருந்தார்.
திரைப்படம் இயக்க வேண்டும் என்பதற்காக நடிப்பை குறைத்துக்கொண்ட மனோஜ், பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தை ரீமேக் செய்து இயக்குனராக திட்டமிட்டார். ஆனால், அப்படம் ஆரம்ப நிலையிலேயே கைவிடப்பட்டது. பிறகு 2023 அக்டோபர் 27ம் தேதி வெளியான ‘மார்கழி திங்கள்’ என்ற தமிழ் படத்தின் மூலம் ‘மனோஜ் பாரதிராஜா’ என்ற பெயரில் இயக்குனராக அறிமுகமானார். இதில் ஷ்யாம் செல்வன், ரக்ஷணாவுடன் பாரதிராஜாவும் நடித்திருந்தார். கடந்த 2005 நவம்பர் 19ம் தேதி தனது காதலியும், நடிகையுமான நந்தனாவை திருமணம் செய்த மனோஜுக்கு ஹர்ஷிதா, மதிவதனி ஆகிய 2 மகள்கள் இருக்கின்றனர்.
மலையாள நடிகையான நந்தனா, தமிழில் சில படங்களில் நடித்துள்ளார். ‘சாதுரியன்’ படத்தில் இணைந்து நடித்தபோது மனோஜும், நந்தனாவும் காதலித்தனர். இளையராஜா இரங்கல்: இசையமைப்பாளர் இளையராஜா வெளியிட்டுள்ள வீடியோவில், “எனது நண்பன் பாரதியின் மகன் மனோஜ் மறைந்த செய்தி கேட்டு அதிர்ந்து போனேன். இப்படியொரு சோகம் பாரதிக்கு நேர்ந்திருக்க வேண்டாம். மனோஜின் ஆன்ம சாந்தியடைய வேண்டுகிறேன்’’ என உருக்கமாக பேசியுள்ளார். மனோஜ் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மதிமுக ெபாதுச்செயலாளர் வைகோ , முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
* முதல்வர் இரங்கல்
நடிகரும் இயக்குநர் பாரதிராஜாவின் மகனுமான மனோஜ் பாரதி மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். தனது தந்தையின் இயக்கத்தில் தாஜ்மகால் திரைப்படம் மூலம் அறிமுகமாகி, சமுத்திரம், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம் எனத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் மனோஜ். இயக்கம் உள்ளிட்ட துறைகளிலும் முயன்று பார்த்தவர் மனோஜ். இளம் வயதில் அவர் எதிர்பாராதவிதமாக மறைந்துவிட்டது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அன்பு மகனை இழந்து வாடும் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
The post பாரதிராஜா மகன் நடிகர் மனோஜ் திடீர் மரணம்: இதய அறுவை சிகிச்சை நடந்த நிலையில் மாரடைப்பு appeared first on Dinakaran.