தெலங்கானா சுரங்க விபத்து: 30 நாட்களுக்கு பின்பு மேலும் ஒரு தொழிலாளியின் உடல் கண்டுபிடிப்பு!

ஹைதராபாத் : தெலங்கானாவில் நாகா்கா்னூல் மாவட்டத்தில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் பலியான இரண்டாவது தொழிலாளரின் உடலை மீட்பு குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.தெலங்கானாவின் ஸ்ரீசைலம் இடதுகரை வாய்க்காலில் அமைக்கப்பட்டு வரும் சுரங்கத்தின் ஒரு பகுதி பிப்.22ம் தேதி இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளுக்குள் 8 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். இதில் குர்ப்ரீத் சிங் என்ற தொழிலாளியின் உடல் மார்ச் 9-ம் தேதி மீட்கப்பட்டது. 14 கி.மீ. நீள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கியவர்களை ரோபோடிக் தொழில் நுட்பம் உதவியுடன் மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதனை இயற்கை பேரிடராக அரசு அறிவித்தது.

இந்த நிலையில், ஒரு மாதத்தைக் கடந்தும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் லோடேட்டி தலைமையில் நடைபெற்று வரும் மீட்புப் பணியில் இன்று அதிகாலை மற்றொரு உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மிகவும் கடினமான நிலையில் சிக்கியுள்ள அந்த உடலை மீட்கும் பணியில் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். உடல் மீட்கப்பட்ட பிறகு மரபணு பரிசோதனை செய்யப்படும். அதன்பிறகு இறந்தவரின் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படும்.மேலும், 6 தொழிலாளர்களின் உடலைத் தேடும் பணி தொடர்கிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்படும் என்று தெலங்கானா முதல்வர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post தெலங்கானா சுரங்க விபத்து: 30 நாட்களுக்கு பின்பு மேலும் ஒரு தொழிலாளியின் உடல் கண்டுபிடிப்பு! appeared first on Dinakaran.

Related Stories: