ஈரோடு, மார்ச் 25: நசியனூர் பேரூராட்சி தலைவர் மோகனப்பிரியா தலைமையில் பேரூராட்சி கவுன்சிலர்கள் நேற்று ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டம் நசியனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆட்டையாம்பாளையம் பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலின் கசிவு நீர் ஓடையில் டேங்கர் லாரி மூலமாக பெருந்துறை சிப்காட் பகுதியில் இயங்கி வரும் தனியார் ஸ்டீல் நிறுவனத்தின் ஆலை கழிவுகளை சட்ட விரோதமாக பொதுமக்களுக்கும், உயிரினங்களுக்கும் அதிக பாதிப்பு ஏற்படும் என்று தெரிந்தே ஓடையில் கலந்துள்ளனர்.
இதனால், நிலத்தடி நீர், தடுப்பணைகள் முழுமையாக மாசடைந்துள்ளது. விவசாய நிலங்களும் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. உயிர் சேதம் அடைய கூடிய வாய்ப்பும் உள்ளது. இந்த, ஆலை நிர்வாகத்தினர் ஏற்கனவே இதுபோல் குற்றச்செயலை செய்ததற்கு ஆலையின் மீது மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, தொடர்ந்து அனைத்து உயிரினங்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் செயல்படும் ஆலையின் உரிமையாளர் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.
The post கீழ்பவானி கசிவு நீர் ஓடையில் கழிவை கொட்டிய ஆலை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்பேரூராட்சி தலைவர் எஸ்பி.யிடம் புகார் appeared first on Dinakaran.