ஈரோடு, மார்ச் 3: ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று முதல் தொடங்கியது. தேர்வினை 109 தேர்வு மையங்களில் 23,307 மாணவ-மாணவிகள் எழுதினர். தமிழ்நாட்டில் பிளஸ் 2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு நேற்று முதல் தொடங்கியது. இத்தேர்வு வருகிற 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வினை ஈரோடு மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் 10,976 மாணவர்களும், 12,331 மாணவிகள் என மொத்தம் 23,307 மாணவ-மாணவிகளும் மற்றும் தனித்தேர்வர்கள் 669 பேர் எழுதினர்.
இதில், முதல் தேர்வாக நேற்று தமிழ் மற்றும் இதர மொழி பாடத்திற்கான தேர்வு நடந்தது. இவர்கள் தேர்வு எழுத வசதியாக 109 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இதுதவிர 7 தனித்தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டது. தேர்வுக்கான வினாத்தாள்கள் ஈரோடு, அந்தியூர், கோபி, தாளாவடி என 4 கட்டு காப்பு மையத்தில் வைத்து சீலிடப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வு துவங்க சில மணி நேரத்திற்கு முன் வினாத்தாள்கள், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் அந்தந்த தேர்வு மையங்களுக்கு அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் எடுத்து வரப்பட்டன.
417 பேருக்கு ஸ்கிரைப் உதவி: மாற்றுத்திறனாளிகள், விபத்தினால் பாதிப்படைந்த மாணவ-மாணவிகள் என 417 பேர் தேர்வு எழுத வசதியாக ஸ்கிரைப்(சொல்வதை கேட்டு எழுதுபவர்கள்) மூலம் தேர்வு எழுதினர். தேர்வு மையத்திற்குள் இருந்து தேர்வு அறைக்குள் மாணவ-மாணவிகள் காலை 9.45 மணிக்கு அனுமதிக்கப்பட்டனர். காலை 9.55 மணிக்கு தேர்வு அறை கண்காணிப்பாளர் வினாத்தாளை பிரித்து, 10 மணிக்கு விநியோகிக்கப்பட்டது. இதையடுத்து 10.10 மணிக்கு விடைத்தாள் வழங்கப்படும். தேர்வானது சரியாக 10.15 மணிக்கு தொடங்கியது. மதியம் 1.15 மணிக்கு தேர்வு நிறைவடைந்தது.
போலீஸ் பாதுகாப்பு: மாவட்டத்தில் 109 தேர்வு மையங்களிலும், தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள், தேர்வு பணியில் உள்ள ஆசிரியர், ஆசிரியைகளை தவிர, பிற நபர்கள் வருவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலா ஒரு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், வினாத்தாள் பாதுகாப்பு மற்றும் தேர்வு முடிந்ததும் விடைத்தாள் கட்டு காப்பு மையத்திற்கு எடுத்து செல்லும் பாதுகாப்புக்கு தனியாக போலீசாரும் நியமிக்கப்பட்டனர். 109 முதன்மை கண்காணிப்பாளர், கூடுதல் கண்காணிப்பாளர்களும், தேர்வு அறைக்கண்காணிப்பாளர்களாக 1,500க்கும் மேற்பட்ட ஆசிரியை, ஆசிரியர்கள் பணியாற்றினர்.
முறைகேடுகளை தடுக்க பறக்கம் படை: மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் முறைகேடு மற்றும் ஒழுங்கீன நடவடிக்கைகளை தடுக்க 177 பேர் கொண்ட பறக்கும் படை குழுக்களும் அமைக்கப்பட்டிருந்தது. இக்குழுவினர் மாவட்டம் முழுக்க தனித்தனியாக ஒவ்வொரு தேர்வு மையத்திலும் திடீர் ஆய்வு செய்தனர்.
