பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்

ஈரோடு, மார்ச் 12: ஈரோடு கள்ளுக்கடை மேடு, பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் நேற்று திரளான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு, கள்ளுக்கடைமேடு பகுதியில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் குண்டம் மற்றும் பொங்கல் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பு ஆண்டுக்கான விழா கடந்த பிப்ரவரி 24ம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து கடந்த 2ம் தேதி விழா கொடியேற்றப்பட்டு, 8ம் தேதி பக்தர்கள் பால் குடம் ஊர்வலம் எடுத்து வந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். தொடர்ந்து, தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் கடந்த 9ம் தேதி இரவு அக்னி கபால பூஜை நடைபெற்றது. அதன்பின்னர், நேற்று முன்தினம் இரவு குண்டம் பற்ற வைக்கப்பட்டது. முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் திருவிழா நேற்று (11ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு கோயிலில் நடைபெற்றது. இதில், காப்பு கட்டி விரதம் இருந்து வந்த திரளான ஆண், பெண் பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து கோயில் வளாகத்தில் அம்மனுக்கு பொங்கல் வைத்து படைத்து வழிபட்டனர். இவ்விழாவையொட்டி தீயணைப்புத்துறையினர் 14 பேர், தீயணைக்கும் வாகனத்துடன் பணியில் ஈடுபட்டிருந்தனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories: