திருமணி-மேல்மொணவூர் இடையே பாலாற்றில் மேம்பாலம் அமைவது எப்போது?

*10 ஆண்டுகளாக கிராம மக்கள் எதிர்பார்ப்பு

கே.வி.குப்பம் : திருமணி-மேல்மொணவூர் இடையே பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்கவேண்டும் என கிராம மக்கள் கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த லத்தேரி, அன்னங்குடி, திருமணி, விழுந்தாங்கல் ஆகிய ஊராட்சிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர்.

இங்கு வசிக்கும் பெரும்பாலான மாணவர்கள், வேலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்றனர். மேலும் பலர் வேலூரில் கூலித்தொழில் செய்கின்றனர். இவர்கள் வேலூருக்கு வந்து செல்ல, சுமார் 12 கிமீ தூரம் கடந்து லத்தேரி பஸ் நிலையம் சென்று அங்கிருந்து காட்பாடி வழியாக வேலூர் வரவேண்டிய நிலை உள்ளது.

இதுதவிர 5 கிமீ தொலைவில் திருமணி-மேல்மொணவூர் இடையே உள்ள பாலாற்று மண் பாதையும் உள்ளது. இந்த வழியாக தண்ணீர் வரத்து இல்லாதபோது மட்டுமே செல்ல முடியும். மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டால், சுமார் 12 கிமீ தூரம் காட்பாடி வழியாக வேலூர் செல்ல வேண்டி உள்ளது.எனவே திருமணி-மேல்மொணவூர் பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், `திருமணி-மேல்மொணவூர் இடையே பாலம் அமைக்க சுமார் 10 ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

மழைக்காலங்களில் பாலாற்றில் நீர்வரத்து உள்ளபோது மண்சாலையை கடக்க முடியாது. இதனால் காட்பாடி வழியாக வேலூர் செல்லவேண்டி உள்ளது. பாலாற்றில் பாலம் அமைக்க அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு நடத்திவிட்டு செல்கின்றனர். ஆனால் பாலம் அமைக்கும் பணி எதுவும் இதுவரை தொடங்கப்படவில்லை. எனவே விரைவில் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றனர்.

The post திருமணி-மேல்மொணவூர் இடையே பாலாற்றில் மேம்பாலம் அமைவது எப்போது? appeared first on Dinakaran.

Related Stories: