இணையத்தில் திருமணத்திற்கு வரன் தேடுபவர்கள் ஜாக்கிரதை: சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை

சென்னை: இணையதளத்தில் திருமணத்திற்கு வரன் தேடுபவர்கள் ஜாக்கிரதை என சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து சைபர் க்ரைம் போலீசார் வெளியிட்ட அறிக்கை: சைபர் குற்றவாளிகள் தற்போது திருமண தளங்களில் போலிக் கணக்குகளை உருவாக்கி, அந்த தளங்களில் திருமண வரன்களைத் தேடும் நபர்களை குறிவைக்கிறார்கள். பின்னர் அவர்களை தொடர்புகொண்டு, தொடர்ந்து உரையாடல்கள் மூலம் நம்பிக்கையை பெறுகின்றனர்.

அவர்களுடன் நெருக்கமான பிணைப்பு ஏற்பட்டவுடன், அவர்களை மோசடியில் சிக்கவைக்கின்றனர். சமீபத்தில் திருமண வரன்தேடும் தளங்களைப் பயன்படுத்தி, போலி முதலீட்டு தளங்களில் (www.oxgatens.com, www.oxgatens.net, www.cityindexmain.com, www,cityindexmain.com, www,cityindexlimited.com) பெருந்தொகையை முதலீடு செய்யவைப்பதில் ஒரு புதிய போக்கு காணப்படுகிறது.
தேசிய சைபர் க்ரைம் புகார் போர்டலில் 2024, 2025ம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் திருமண வரன்தேடும் தளங்களின் மூலம் மோசடி தொடர்பான 379 புகார்கள் பதிவாகியுள்ளன எனவே, பொதுமக்கள் ஆன்லைனில் சந்திக்கும் நபர்களின் பின்னணியை சரிபார்க்கவும்.

அவர்கள் வீடியோ அழைப்புகள் அல்லது நேரடி சந்திப்புகளைத் தவிர்த்தால் எச்சரிக்கையாக இருங்கள். ஆன்லைன் மூலம் அறிமுகமானவரின் ஆலோசனையின் அடிப்படையில் ஒருபோதும் பணத்தை முதலீடு செய்யாதீர்கள். குறிப்பாக, குறுகிய காலத்திற்குள் அதிக வருமானம் தருவதாக அவர்கள் உறுதியளித்தால் எச்சரிக்கையாக இருக்கவும். கட்டணமில்லா உதவி எண் அந்நியர்களுடன் வாட்ஸ்-அப் அல்லது பிற மெசேஜிங் ஆப்ஸ் மூலம் தனிப்பட்ட அல்லது நிதி தகவல்களைப் பகிர வேண்டாம்.

நம்பகமான முதலீடுகள் முறையான சேனல்கள் மூலம் மட்டுமே செயல்படுத்தப்படும். இதுபோன்ற மோசடி நடவடிக்கைகளில் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளைக் கண்டால், உடனடியாக நடவடிக்கை எடுககவும். சைபர் கிரைம் கட்டணமில்லா உதவி எண் 1930-ஐ அழைக்கவும் அல்லது www.cybercrime.gov.in-ல் புகார் பதிவு செய்யவும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

The post இணையத்தில் திருமணத்திற்கு வரன் தேடுபவர்கள் ஜாக்கிரதை: சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: