கூட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறை மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், 2025-26ம் நிதியாண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பிற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய கோயில் திருப்பணிகள் மற்றும் பக்தர்களுக்கான கூடுதல் மேம்பாட்டு பணிகள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது: மண்டல இணை ஆணையர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை தங்கள் பகுதியில் ஆய்வுக் கூட்டங்களை நடத்துவதோடு, வாரத்திற்கு 2 முறை நடைபெற்று வரும் திருப்பணிகளை கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு மண்டல இணை ஆணையர்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்பீட்டிலான திருப்பணிகளுக்கு அவர்களே ஒப்புதல் தரலாம் என அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதனை முழுமையாக பயன்படுத்தி திருப்பணிகளை விரைந்து முடித்திட சிறப்பு கவனம் செலுத்தி பணியாற்றிட வேண்டும். அப்போதுதான் மக்களிடம் நமது துறைக்கும், தமிழக அரசுக்கும் இருக்கும் நன்மதிப்பு மென்மேலும் உயரும். அதேபோல், திருப்பணி கட்டுமானங்களின் தரத்தில் எவ்விதத்திலும் குறைவு ஏற்படாத வகையில் சிறந்த முறையில் பணிகள் நடைபெறுவதற்கு பொறியாளர்கள் முழுவீச்சில் பணியாற்ற வேண்டும்.
உயர் அலுவலர்கள் களத்திற்கு நேரடியாக வருகிறார்கள் என்றால்தான் அவருக்கு கீழுள்ள அனைவரும் களத்தில் நிற்பார்கள். ஆகவே நீங்கள் ரோல் மாடலாக முதலில் களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும். கோயில்களில் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வரும் நாட்களில் சிறப்பு கவனம் செலுத்தி அலுவலர்கள் பணியாற்ற வேண்டும். இந்தாண்டு ஒவ்வொரு மண்டலத்திலும் புதிதாக 100 கோயில்களை திருப்பணிக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
எங்கு பார்த்தாலும் இறைப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது என்ற நிலை தொடர வேண்டும். அடுத்த மாதம் 17ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கையில் அறிவிக்கப்பட வேண்டிய அறிவிப்புகள் அனைத்தும் சிறப்பானதாகவும், உடனடியாக பக்தர்களுக்கு பயனளிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.
அதேபோல சட்டமன்றத்தில் அறிவிக்கப்படும் திட்டம் எதுவாக இருந்தாலும் அதனை ஓராண்டு காலத்திற்குள் முடித்திடும் வகையில் அலுவலர்கள் பணியாற்ற வேண்டும். அதற்கேற்றார் போல் செயல் திட்டங்களை வகுத்து அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என்றார். கூட்டத்தில் ஆணையர் ஸ்ரீதர், கூடுதல் ஆணையர்கள் பழனி, திருமகள், ஹரிப்ரியா, தலைமைப் பொறியாளர் பெரியசாமி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், இணை ஆணையர்கள் கலந்து கொண்டனர்.
The post தமிழகத்தில் உள்ள கோயில்களில் பக்தர்கள் அதிகளவில் வரும் நாட்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.