பிரதமர் மோடி பங்கேற்கிறார்; பாம்பன் புதுப்பாலத்தின் திறப்பு விழா எப்போது? தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளர் பேட்டி

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் ரூ.535 கோடி மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மின்சார ரயில் பாலம் பணிகள் முழுமையாக நிறைவு பெற்று, இரண்டு மாதங்களுக்கு மேலாக திறப்பு விழாவிற்கு காத்திருக்கிறது. இதனிடையே ரயில்வே நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆய்வுகளும், திறப்பு விழா ஒத்திகை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இதன் அடிப்படையில் இம்மாதத்தில் புதிய ரயில் பாலம் பயன்பாட்டுக்கு வரும் என பெரும் எதிர்பார்ப்பில் இருந்த அனைத்து தரப்பு மக்களும் ஏமாற்றம் அடைந்தனர்.

புதிய ரயில் பாலம் திறப்பு விழா தொடர்பான ஏற்பாடுகள் குறித்து தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் தலைமையில் நேற்று ஆய்வு நடைபெற்றது. ரயில் பெட்டியில் காலையில் மண்டபம் ரயில் நிலையம் வந்த அவர், மண்டபம் முகாம் ஹெலிபேட் தளத்தை ஆய்வு செய்தார். அடுத்து பாம்பன் சாலை பாலத்தில் இருந்து புதிய ரயில் பாலத்தை பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே சுற்றுலாத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆலயம் விடுதி வளாகத்தை பார்வையிட்டு, மேடை நிகழ்ச்சி நடக்க இருக்கும் இடத்தை வரைபடங்களுடன் ஆய்வு செய்தார். தொடர்ந்து பாம்பன் குந்துகால் விவேகானந்தர் மணி மண்டபத்தை பார்வையிட்டார்.

பின்னர் தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் அளித்த பேட்டியில், ‘‘புதிய ரயில் பாலம் திறப்பு குறித்த உறுதியான தேதி விரைவில் வெளிவரும். பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளதால், அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறோம். புதிய பாலத்திற்கு அப்துல் கலாம் பெயர் சூட்டும் திட்டம் இல்லை’’ என்றார். ஆய்வில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் வஸ்தவா, ராமநாதபுரம் எஸ்பி சந்தீஷ், முதுநிலை கோட்ட பொறியாளர் சந்தீப் பாஸ்கர், முதுநிலை கோட்ட ரயில் இயக்க மேலாளர் பிரசன்னா, முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் டி.எல். கணேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

The post பிரதமர் மோடி பங்கேற்கிறார்; பாம்பன் புதுப்பாலத்தின் திறப்பு விழா எப்போது? தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளர் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: