அதில், திருச்சி மாவட்டத்தில் திருவெறும்பூர் பகுதியில் புதிய தொழிற்பூங்கா அமைய உள்ளதாக கூறப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் திருவெறும்பூர் பகுதியில் பெல் தொழிற்சாலை அமைந்துள்ளதால், அதனை நம்பி ஏற்கனவே அப்பகுதியில் சிறுதொழில் நிறுவனங்கள் சுமார் 600க்கும் மேற்பட்டவை செயல்பட்டு வந்தது. அதில் பெல் நிறுவனத்திற்கு வரவேண்டிய ஆர்டர்கள் குறைந்ததால் சுமார் 300க்கும் மேற்பட்ட சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வேலை இல்லாமல் இழுத்து மூடப்பட்டது. தற்போது அந்நிறுவனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக புத்துயிர் பெற்று வளர ஆரம்பித்துள்ள நிலையில், தமிழக அரசு இந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை வளர்க்க நடவடிக்கை எடுக்கும் விதமாக 10 லட்சம் தொழில் நிறுவனங்களுக்கு கடன் நிதி உதவி வழங்கிட அறிவிப்பை வௌியிட்டுள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், சிறு, குறு தொழில் செய்துவரும் நிறுவனங்கள் இந்த பட்ஜெட்டிற்கு வரவேற்பு அளித்துள்ளன. மேலும் இதனால் பல புதிய நிறுவனங்களும் உருவாக வாய்ப்பு உள்ளது.
மேலும், வேலைவாய்ப்பும் பெருகும் என்று தெரிவித்துள்ளனர். மத்திய மண்டலமான திருச்சியில் இந்த தொழிற்பேட்டையால் குறைந்தது 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளுக்கு உறுதியளித்துள்ளது. திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் பொறியியல் சார்ந்த தொழில்களுக்கு ஏற்கனவே அமைப்யபட்டுள்ள சிப்காட் பூங்காக்கள் மூலம் பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அறிவிக்கப்பட்ட சிட்கோ தொழிற்பேட்டை சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் தேவைகளை பூர்த்தி செய்யும், பெரும்பாலும் திருச்சி, தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலத்தில் பரவியுள்ள பெல் திருச்சியின் துணை அலகுகள் பயனடையும். திருவெறும்பூர் பகுதியில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே உயர் ஆற்றல் ஏவுகணை தொழிற்சாலையிலிருந்து (எச்.இ.பி.எப்) சுமார் 268 ஏக்கர் நிலத்தை மீட்டெடுத்துள்ளது. முன்மொழியப்பட்ட சிட்கோ தொழில்துறை எஸ்டேட் திருவெறும்பூர் சிப்காட்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்திற்கு அருகிலுள்ள சூரியூர் கிராமத்தில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிப்காட் பூங்காவின் இருப்பிடம் பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை என்றாலும், திருச்சி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள திருவெறும்பூரில் முதலீடு வரக்கூடும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து திருச்சி ஏற்றுமதி இறக்குமதி கூட்டமைப்பின் தலைவர் கனகசபாபதி கூறுகையில், ‘தமிழக அரசு அறிவித்த தொழிற் பூங்கா வரவேற்கப்பட வேண்டியது. இன்றைய காலகட்டத்தில் அதிகமான தொழில்களை ஊக்கப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். தற்போது பெல் நிறுவனம், துப்பாக்கி தொழிற்சாலை, ஏவுகணை தொழிற்சாலை இருந்தாலும், தற்போது இந்த பொது நிறுவனங்களிலிருந்து பணிகள் மட்டுமே பெறப்பட்டு அதை மட்டும் செய்து கொடுக்கும் நிலை உள்ளது. ஆனால் தற்போது அமைய உள்ள தொழிற்பூங்காவில் பொறியியல் மட்டுமல்லாமல். உணவு தொழிற்சாலைகள், ஏற்றுமதி இறக்குமதி தொழிற்சாலைகள் உள்ளிட்டவைகள் இடம்பெற்றால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
பெரிய நிறுவனங்களிடம் இருந்து ஆர்டர்கள் மட்டும் பெற்று செய்து கொடுப்பதைவிட ஒரு முழுமையான பொருளை உற்பத்தி செய்யும் அளவிற்கு இந்த தொழிற்பூங்கா வடிவமைக்கப்பட்டால் இன்னும் சிறப்பாக அமையும். அதேபோல் பொறியியல் பணிகளை பொறுத்தவரை பாதுகாப்பு துறை நிறுவனங்களிடம் இருந்து கூடுதல் பணிகள் வரவேண்டும். கப்பல் கட்டும் நிறுவனங்களிடம் இருந்தும் ஆர்டர்கள் வர வேண்டும். இந்த பணிகள் வரும்பட்சத்தில் அநேக வேலைவாய்ப்பு நமக்கு கிடைக்கும். அதேபோல் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக, மாவட்டத்தில் உள்ள மணப்பாறை மற்றும் மண்ணச்சநல்லூர் ஆகிய இடங்களில் இரண்டு புதிய தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள் (ஐ.டி.ஐ) அறிவிக்கப்பட்டுள்ளன. இது இன்னும் கூடுதல் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கான திட்டமாக அமைந்துள்ளது’ என்றார்.
The post சிறு,குறு நிறுவனங்கள் புத்துயிர் பெறும் திருவெறும்பூரில் 268 ஏக்கரில் தொழிற்பூங்கா: 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு appeared first on Dinakaran.