அருமனை, மார்ச் 22: அருமனை அருகே மருதம்பாறை- கணபதிக்கல் செல்லும் சாலையில் நேற்று முன்தினம் இரவு பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் பெரிய பாம்பு ஒன்று இருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவர்கள் குலசேகரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அப்பகுதியில் விறகு கட்டு அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் சுமார் 10 அடி நீளம் கொண்ட பாம்பு பதுங்கி இருப்பதை கண்டனர். அது கொடிய விஷம் கொண்ட ராஜநாகம் என தெரியவந்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் நவீன பாம்புபிடி உபகரணத்தை பயன்படுத்தி ராஜநாகத்தை லாவகமாக பிடித்தனர். பின்னர் அதனை பத்திரமாக அடைத்து களியல் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் பாம்பை விராலிமலையில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். ராஜநாகம் பிடிபட்டதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.
The post அருமனை அருகே குடியிருப்பில் புகுந்த 10 அடி ராஜநாகம் சிக்கியது appeared first on Dinakaran.
