தொண்டி,டிச.31:தொண்டி, நம்புதாளை உள்ளிட்ட பகுதிகளில் மாலை நேரங்களில் கடை வீதிகள், குடியிருப்பு பகுதிகளில் அமர்ந்து மதுபானம் அருந்துகின்றனர். இது பொதுமக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்துவதால், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டி மற்றும் நம்புதாளை பகுதியில் மாலை நேரங்களில் குடிமகன்கள் தொல்லை தாங்க முடியவில்லை. பள்ளி வளாகம், குடியிருப்பு செல்லும் பாதை, வயல்காடுகள் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் மதுபானம் குடித்து விட்டு பாட்டில்களை உடைத்து செல்கின்றனர். குளம் மற்றும் வயல்களில் கிடக்கும் பாட்டில்கள் கால்களை பதம் பார்த்து விடுகிறது. மாலை நேரங்களில் போலீசார் ரோந்து சென்றால் இவர்களை கட்டுப்படுத்தி விடலாம் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியது, வயல் காடுகளிலும், குளங்களிலும் குடிமகன்கள் உடைத்துப் போடும் பாட்டில்கள் வரும் காலங்களில் பெரும் விளைவுகளை ஏற்ப்படுத்தலாம். வயல்களை உழவு செய்ய செல்லும் விவசாயிகள் வயல் முழுவதும் பாட்டில் உடைத்து போட்டுள்ளதை பார்த்து கண்ணீர் வடிக்கின்றனர். இதேபோல் கடை வீதிகளிலும் போதை ஆசாமிகள் சண்டையும் போட்டுக் கொள்கின்றனர். பள்ளி வளாகம், கோயில் பகுதி என அனைத்து இடத்திலும் மதுபானம் அருந்துகின்றனர். சில நேரங்களில் வீண் பிரச்னை ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்த தினமும் போலீசார் ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
