ஆவடி, டிச.31: ‘‘முதல்வரின் முகவரி’’ மனுக்கள் மீதான விசாரணை முடிவுகளில் ஆவடி மாநகர காவல் ஆணையரகம் மாநிலம் அளவில் முதலிடம் பிடித்துள்ளது. இதுகுறித்து, ஆவடி காவல் ஆணையரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆவடி காவல் ஆணையரகத்தில் 2025ம் ஆண்டு காவல் சேவைகளை மேம்படுத்தியதன் விளைவாக, குற்றங்கள் தடுக்கப்பட்டு, புகார்கள் மீதான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, சட்டம் ஒழுங்கு சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டுள்ளது. ஆவடி காவல் ஆணையரகத்தில் காவல் துறையினர் ரவுடிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக, கொலை வழக்குகள் வெகுவாக குறைந்துள்ளன. கடந்த 2023ம் ஆண்டில் 59 கொலை வழக்குகளும், 2024ம் ஆண்டில் 48 கொலை வழக்குகளும், இந்த ஆண்டில் 38 கொலை வழக்குகளும் பதிவாகியுள்ளது, 2023ம் ஆண்டை ஒப்பிடுகையில், 35 சதவிகிதம் கொலை வழக்குகள் குறைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மட்டும் 190 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நடப்பாண்டில், கொலை முயற்சி வழக்குகள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வழக்குகள், வீட்டை உடைத்து கொள்ளையடிப்பது, சங்கிலி பறிப்பு மற்றும் கைப்பேசி பறிப்பு வழக்குகளும் வெகுவாக குறைந்துள்ளன.
போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டு, காவல் துறையினர் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இது சம்பந்தமாக, இவ்வாண்டில் 736 நபர்கள் கைது செய்யப்பட்டதோடு, அவர்களிடமிருந்து 1800 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அரசால் தடை செய்யப்பட்ட 18,900 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது,
இதுவே மாநிலத்திலேயே பறிமுதல் செய்யப்பட்ட அதிகபட்ச அளவாகும். குட்கா விற்பனையில் ஈடுபட்ட சில முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். போதைப் பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திய தோடு, போதைப் பொருட்கள் பழக்கத்தை தடுக்கவும், ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதைப் பொருட்கள் எதிர்ப்பு மன்றங்கள் நிறுவப்பட்டுள்ளன.
ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட 200 அரசு பள்ளிகளில், “100 அடிகள்” என்ற ஒரு நிகழ்ச்சி துவக்கப்பட்டு, ஒவ்வொரு பள்ளியிலும் 100 அடிகள் தூரத்தில் ஒரு தடுப்பு ஏற்படுத்தப்பட்டு “புகையிலை இல்லா பகுதி” என அறிவிக்கப்பட்டு, தற்போது செயல்பாட்டில் உள்ளது. 100 அடிக்குள் செயல்படும் அனைத்து கடைகளிலும் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படக்கூடாது என விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாண்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக மிகப்பெரிய அல்லது பரபரப்பு மிகுந்த குற்றங்கள் எதுவும் பதிவாகவில்லை. காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவாகும் அனைத்து வழக்குககளிலும் தனிக்கவனம் செலுத்தி 60 நாட்களுக்குள் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். மேலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடையே பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு நவடிக்கைகள் குறித்தும், போதைப் பொருட்களுக்கு எதிராகவும் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் காவல் துறையினரை சுலபமாக அணுகி அவர்களிடம் தங்களது குறை தீர்வு மனுக்களை ஆவடி காவல் ஆணையாளர் ஒவ்வொரு நாளும் நண்பகல் 12.30 மணியிலிருந்து பிற்பகல் 2.00 மணி வரையில் அவருடைய அலுவலகத்தில் மனுதாரர்களை நேரடியாக சந்தித்து மனுக்களை பெற்று, மனுக்கள் மீது தக்க நடவடிக்கையை எடுத்து வருகிறார். மேலும், மிகப்பெரிய அளவிலான பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் ஒன்று ஒவ்வொரு புதன்கிழமையும் நடத்தப்பட்டு, அவர்களது மனுக்கள் மீதான விசாரணை முடிவு குறித்தும் மனுதாரர்களிடமிருந்து கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகின்றன. “முதல்வரின் முகவரி” சம்பந்தமான மனுக்கள் மீதான விசாரணை குறித்து தனிக்கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. “முதல்வரின் முகவரி” மனுக்கள் மீதான விசாரணை முடிவுகளில் மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் ஆணையரகங்களுக்கு இடையேயான செயல்பாடுகளில் ஆவடி மாநகர காவல் ஆணையரகமானது 99 சதவிகிதத்தை பெற்று மாநிலத்திலேயே முதலிடத்தில் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
