மீட்டர் விற்பனையாளர்கள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: மின்சார ஒழுங்குமுறை ஆணையம் எச்சரிக்கை

சென்னை: மீட்டர் விற்பனையாளர்கள் நுகர்வோரிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் எச்சரித்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் மின் உற்பத்தி செய்து நுகர்வோருக்கு விநியோகம் செய்து வருகிறது. நுகர்வோர் பயன்படுத்தும் மின்சாரத்தை மின் மீட்டர்கள் வாயிலாக கணக்கெடுத்து நுகர்வோரிடம் இருந்து கட்டணம் வசூலிக்கிறது. இந்நிலையில் புதிதாக மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் நுகர்வோர் அல்லது மீட்டர் பழுது காரணமாக மாற்றுவோருக்கு மின் வாரியம் மீட்டர்களை வழங்கும், அதற்கான கட்டணத்தையும் பெறும். ஒரு சில சமயங்களில் மின் வாரியத்திடம் மீட்டர் இல்லாத நிலை ஏற்படுகிறது.

இதனால் மின் இணைப்புக்கு காத்திருப்போர் உடனடியாக மீட்டர் பொறுத்த தனியார் நிறுவனங்களிடம் இருந்து மீட்டர் வாங்கும் நடைமுறையை கடந்த ஆண்டு தமிழ்நாடு மின் வாரியம் அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் படி நுகர்வோர் நேரடியாக தனியாரிடம் இருந்து மீட்டரை வாங்கலாம், ஆனால் மீட்டருக்கான விலையை மின் பகிர்மான கழகம் தான் நிர்ணயித்துள்ளது. இந்நிலையில் ஒரு சில இடங்களில் தனியார் மின் விற்பனையாளார்கள் நுகர்வோரிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

குறிப்பாக ரூ.8000 மதிப்பிலான 100 ஆம்பியர் மீட்டருக்கு ரூ.17,852 வசூலிக்கப்பட்டுள்ளதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு புகார் வந்துள்ளது. இதையடுத்து மீட்டருக்கு தனியார் விற்பனையாளர்கள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மின் பகிர்மான கழத்திற்கு ஒழுங்முறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட உத்தரவில், தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட மீட்டர் விற்பனையாளர்களுக்கும் மீட்டருக்கு அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என நோட்டீஸ் வழங்க வேண்டும். மேலும் இதனை மீறும் நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட வேண்டும் எனக் கூறியுள்ளது.

The post மீட்டர் விற்பனையாளர்கள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: மின்சார ஒழுங்குமுறை ஆணையம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: