திருப்புவனம்: திருப்புவனம் பூமாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புதூரில் பூமாரியம்மன்-ரேணுகாதேவி கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்தாண்டு திருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையடுத்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்றது. இரவு 10 மணியளவில் கொடியேற்றம் நடந்தது.
இதைதொடர்ந்து பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் தொடங்கினர். விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். விழாவில் முக்கிய நிகழ்வாக வரும் 28ம் தேதி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னிச்சட்டி, ஆயிரம் கண்பானை, மாவிளக்கு எடுத்தும், பொம்மை வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துவர். இதற்கான ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் தண்ணாயிரம் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
The post திருப்புவனம் பூமாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம் appeared first on Dinakaran.