சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் 23ம் தேதி ஜாக்டோ ஜியோ சார்பில் உண்ணாநிலை அறப்போராட்டம்: நிர்வாகிகள் அறிவிப்பு

சென்னை: சேப்பாக்கம், எழிலக வளாகத்தில் வரும் 23ம் தேதி ஜாக்டோ ஜியோ சார்பில் உண்ணாநிலை அறப்போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் வெளியிட்ட அறிக்கை: பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும், காலவரையின்றி முடக்கப்பட்டுள்ள சரண்டரை வழங்க வேண்டும், 4 லட்சத்திற்கும் மேல் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

2021 தேர்தலின் போது அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. நமது கோரிக்கைகளை, உரிமைகளை மீட்டெடுக்க தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோவோடு நாம், தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் களத்தில் 2017 முதல் நிற்கிறோம். ஜாக்டோ ஜியோ என்கிற கூட்டமைப்பின் ஒன்று பட்ட சக்தியினால் தான் 2017ல் ஏழாவது ஊதிய மாற்றத்தினை பெற்றோம் என்பதை யாரும் மறந்து விட முடியாது.

ஜனநாயகம் நமக்கு அளித்துள்ள போராட்ட உரிமைகளை ஆயுதமாகக் கொண்டு நமது கோரிக்கைகளை வென்றெடுக்க தமிழகத்திலுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் ஜாக்டோ ஜியோவோடு அணி திரள்வோம், உரிமைகளை மீட்டெடுப்போம். வரும் 23ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை, சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் நடைபெறும் ஜாக்டோ ஜியோ உண்ணாநிலை போராட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்வோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் 23ம் தேதி ஜாக்டோ ஜியோ சார்பில் உண்ணாநிலை அறப்போராட்டம்: நிர்வாகிகள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: