ரூ.951.27 கோடி வரி ஏய்ப்பு போலி பட்டியல் வணிகர்கள் 318 பேர் கண்டுபிடிப்பு

சென்னை: 318 போலி பட்டியல் வணிகர்கள், ரூ.951.27 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வணிகவரித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட அறிக்கை: வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மாதாந்திர இணை ஆணையர்கள் அளவிளான ஆய்வுக்கூட்டங்களில் நியாயமாக வணிகம் செய்யும் வணிகர்களின் நலனை கருத்தில்கொண்டு, போலி பட்டியல் வணிகர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள தொடர்ந்து அறிவுறுத்தியதின்பேரில், கடந்த ஆண்டு மார்ச் 14ம் மற்றும் ஜூலை 2ம் தேதிகளில் வணிகவரி ஆணையரின் உத்தரவின்படி முதல் மற்றும் இரண்டாவது மாநில அளவிலான திடீர் செயலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

அதனை தொடர்ந்து, கடந்த 12ம் தேதி மூன்றாம் முறையாக மாநிலம் முழுவதும் தமிழ்நாடு வணிகவரித்துறையின் நுண்ணறிவுப் பிரிவின் மூலம் சீரியமுறையில் திட்டமிடப்பட்ட திடீர் செயலாக்க தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, 318 போலி பட்டியல் வணிகர்கள், ரூபாய் 951.27 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டறியப்பட்டது. குறிப்பாக, திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கிவரும் திருவா. மெட்ரோ எண்டர்பிரைசஸ் என்ற வணிக நிறுவனத்தை சென்னை-2 நுண்ணறிவுக் கோட்டப் பிரிவினர் ஆய்வு செய்து, ரூபாய் 12.46 கோடி அளவில் உள்ளீட்டு வரி போலியாக துய்த்து, அரசுக்கு வரி இழப்பு ஏற்படுத்தியதை கண்டறிந்து, அதன் உரிமையாளர்கள் ஜெயபிரகாஷ் மற்றும் பஷீர் அகமது ஆகியோரை கடந்த 21ம் தேதி கைது செய்து, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்துள்ளனர்.

The post ரூ.951.27 கோடி வரி ஏய்ப்பு போலி பட்டியல் வணிகர்கள் 318 பேர் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: