பேரவையில் செல்வப்பெருந்தகை பாராட்டு சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் தந்தையாக முதல்வர் விளங்குகிறார்

சென்னை: சமூக நல பாதுகாப்புத் திட்டத்தின் தந்தை என்று முதலமைச்சரை அடுத்த தலைமுறை சொல்லும் அளவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய திட்டங்களை தீட்டி பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என்று காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப் பெருந்தகை சட்டமன்றத்தில் நேற்று பாராட்டிப் பேசினார். தமிழக சட்டப் பேரவையில் நிதி அறிக்கை தொடர்பாக நடந்த பொது விவாதத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பேசியதாவது.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்எல்ஏ செல்வப்பெருந்தகை: இந்தியாவிலேயே முதன்முறையாக அனைத்து மாநிலங்களையும் உள்வாங்கி என்னென்ன திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்களோ, ஒவ்வொரு மாநிலத்திலும் என்ன நிதிநிலை அறிக்கை இருக்கிறது என்பதை ஆய்வறிந்து, ஆராய்ந்து, எல்லா அதிகாரிகளோடும் இரவும், பகலுமாக கலந்துபேசி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிதிநிலை அறிக்கையை தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.

பெண்கள் பாதிப்புக்குள்ளாகின்ற கருப்பைவாய் புற்றுநோய்க்கு என்று ஒரு திட்டம் தீட்டி, முதன்முறையாக தமிழ்நாட்டிலே கொடுத்திருக்கிறார்கள். வேறு எந்த மாநிலத்திலும் இந்தத் திட்டம் இல்லை. (மேசையைத் தட்டும் ஒலி). ஊர்க்காவல் படையில் திருநங்கைகளை சேர்த்து அவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். “எல்லார்க்கும் எல்லாம்”, “தமிழ்ப் புதல்வன்”, “புதுமைப் பெண் திட்டம்”. இந்த திட்டத்தை இன்று எல்லா மாநிலங்களும் ஏன் திருப்பிப் பார்க்கிறது என்றால், நம்முடைய மாநில முதலமைச்சர் தான் காரணம்.

சாதிவாரி கணக்கெடுப்பு எடுப்பதை மறுப்பது யார்? பா.ஜ.-வினுடைய தலைவர்கள்தான். பிரதமர் அதில் எந்தவித ஈடுபாடும் காட்டவில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றுதான் நீதிமன்றங்கள் சொல்லுகின்றன. கண்டிப்பாக நம்முடைய முதலமைச்சர், சாதிவாரி கணக்கெடுப்பு எடுப்பதற்கு அதிகாரம் இல்லை என்றாலும் caste survey எடுப்பார் என்பதை நாங்கள் முழுமையாக நம்புகிறோம். நாங்களும் அதை வலியுறுத்துகிறோம்.

தேச தந்தை என்று கேள்விப்பட்டிருக்கிறோம், அரசியலமைப்பின் தந்தை என்று கேள்விப்பட்டிருக்கிறோம். தந்தை பெரியாரை பார்த்திருக்கிறோம். சமூக நல பாதுகாப்புத் திட்டத்தின் தந்தை என்று முதலமைச்சரை அடுத்த தலைமுறை சொல்லும் அளவிற்கு அவர் திட்டங்களை தீட்டி பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இவ்வாறு எம்எல்ஏ செல்வப்பெருந்தகை பேசினார்.

The post பேரவையில் செல்வப்பெருந்தகை பாராட்டு சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் தந்தையாக முதல்வர் விளங்குகிறார் appeared first on Dinakaran.

Related Stories: