எல்லாமே எதிர்மறை தான்…. மகிழ்ச்சி நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 118வது இடம்

லண்டன்: சர்வதேச மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு நேற்று உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டது. கடந்த 2022 முதல் 2024 வரை நடந்த கணக்கெடுப்பு அடிப்படையில் ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி தீர்வுகள் அமைப்புடன், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் நல்வாழ்வு ஆராய்ச்சி மையம் இணைந்து இந்த வருடாந்திர அறிக்கையை வெளியிட்டது. இதில் தொடர்ந்து 8வது ஆண்டாக பின்லாந்து முதலிடம் பிடித்தது. டென்மார்க், ஐஸ்லாந்து, சுவீடன் நாடுகள் அடுத்தடுத்த வரிசையில் இடம் பிடித்தன. எங்கே நம்ம இந்தியா? என்று தேடினால், வழக்கம் போல பட்டியலின் கட்டக்கடைசியில் தான் இடம் பிடித்துள்ளது.

சென்றமுறை 126வது இடம். இந்த முறை 118வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இந்த பட்டியலில் ஒரே மகிழ்ச்சி. இந்தியாவுக்கும் கீழேதான் இலங்கை, ஆப்கன் போன்ற நாடுகளும் உள்ளன என்பதுதான். ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தை பிடித்துள்ளது. நேபாளம் 92வது இடத்திலும் (2024ல் 93) பாகிஸ்தான் 109வது இடத்திலும் (2024ல் 108) இந்தியாவை விட மிகவும் முன்னேறிய நிலையில், இலங்கை 133வது இடத்திலும் (2024ல் 128), வங்கதேசம் 134வது இடத்திலும் (2024ல் 129) பின்தங்கியுள்ளன.

கடந்த ஆண்டு 60வது இடத்தில் இருந்த சீனா, இந்த ஆண்டு 68வது இடத்திற்கு பின்தங்கியது. போரினால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனம் 108வது இடத்தில் உள்ளது (2024ல் 103). உக்ரைன் கூட 111வது இடத்தில் உள்ளது (2024ல் 105வதுஇடம்). மொத்த தேசிய மகிழ்ச்சியில் கவனம் செலுத்தும் பூட்டான், இந்த ஆண்டு உலக மகிழ்ச்சி அறிக்கையில் 147 நாடுகளின் தரவரிசையில் இடம்பெறவில்லை. ஆனால் அமெரிக்கா 24வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இங்கிலாந்து 23வது இடத்தை பிடித்துள்ளது.

டாப் 10 பட்டியல்
1. பின்லாந்து
2. டென்மார்க்
3. ஐஸ்லாந்து
4. சுவீடன்
5. நெதர்லாந்து
6. கோஸ்டோ ரிகா
7. நார்வே
8. இஸ்ரேல்
9. லக்சம்பெர்க்
10. மெக்சிகோ

The post எல்லாமே எதிர்மறை தான்…. மகிழ்ச்சி நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 118வது இடம் appeared first on Dinakaran.

Related Stories: