தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘தமிழ்நாடு போராடும்’ டிசர்ட் அணிந்து நாடாளுமன்றம் வந்த திமுக எம்பிக்கள்: இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

புதுடெல்லி: மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ‘தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ என்கிற வாசகங்கள் எழுதப்பட்ட டிசர்ட் அணிந்து திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்வதால், மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த குடும்பக் கட்டுப்பாட்டு திட்டத்தை முறையாக செயல்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் பாதிக்கப்படும். மக்களவையில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும்.

அதே சமயம், மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த தவறிய உபி உள்ளிட்ட மாநிலங்கள், அதிகப்படியான தொகுதிகளை பெறும். இது நியாயமற்றது என்பதால், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்ய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க திமுக எம்பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

இதனை கண்டித்து நேற்றும் திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது, அவர்கள் தொகுதி மறுவரையறையை நியாயமான முறையில் செய்ய வேண்டுமென்பதை வலியுறுத்தியும், அதற்காக ‘தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ என்கிற வாசகங்கள் அச்சிடப்பட்ட டிசர்ட் அணிந்திருந்தனர்.

மேலும், இந்தி திணிப்பு விவகாரத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாடு எம்பிக்களை அநாகரீகமானவர்கள் என விமர்சித்திருந்த நிலையில் அதை கண்டிக்கும் வகையில், அன்சிவிலைஸ்டு என்கிற ஆங்கில வார்த்தையில் யு மற்றும் என் ஆகிய எழுத்துக்களை அடித்தும், அன்டெமாக்ரடிக் என்ற வார்த்தையில் யு மற்றும் என் ஆகிய எழுத்துக்களை அடித்தும் அச்சிடப்பட்டிருந்த மேல் துண்டை சில எம்பிக்கள் அணிந்திருந்தனர்.

பின்னர், அதே டிசர்ட், மேல் துண்டுடன் கூட்டத் தொடரில் பங்கேற்க அவைக்கு சென்றனர். மக்களவையில், திமுக எம்பிக்கள் ‘தமிழ்நாடு போராடும்’ டிசர்ட்டுடன் வந்ததைப் பார்த்ததும் சபாநாயகர் ஓம்பிர்லா, ‘‘வாசகங்கள் எழுதப்பட்ட டிசர்ட் அணிந்து வருவது நாடாளுமன்ற விதிகளுக்கு எதிரானது. விதிகள் மற்றும் நடைமுறைகளுடன் சபை செயல்படுகிறது. உறுப்பினர்கள் அவையின் கண்ணியத்தையும், மரியாதையையும் பராமரிக்க வேண்டும். ஆனால் சில மூத்த எம்பிக்களே கண்ணியமற்ற செயல்களில் ஈடுபடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

வெளியில் சென்று உங்கள் உடைகளை மாற்றிக் கொண்டு, முறையான ஆடையுடன் அவைக்கு வாருங்கள்’’ எனக் கூறி அவையை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார். இதற்கிடையே, திமுக எம்பிக்கள், தொகுதி மறுவரையறை தொடர்பாக அவையில் விவாதம் நடத்த வேண்டுமென சபாநாயகரிடம் வலியுறுத்தினர். மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்னும் நடத்தப்படாததால் அது குறித்து விவாதிக்க வேண்டிய அவசரம் இல்லை எனக்கூறி அவர் நிராகரித்தார்.

பின்னர் நண்பகல் 12 மணிக்கு அவை மீண்டும் கூடிய போதும், திமுக எம்பிக்கள் தொடர்ந்து டிசர்ட் அணிந்தே வந்தனர். இதனால் அவையில் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதே போல, மாநிலங்களவையிலும் திமுக எம்பிக்கள் இதே டிசர்ட்டில் கலந்து கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் அவையை 12 மணி வரை ஒத்திவைத்தார். அதோடு, கட்சி தலைவர்கள் தனது அறையில் வந்து சந்திக்க கேட்டுக் கொண்டார்.

அதன்படி கட்சி தலைவர்கள் சென்ற போது, டிசர்ட் அணிந்து அவைக்கு வருவது விதிமுறைக்கு எதிரானது என்பதால், டிசர்ட் அணிந்து வரவேண்டாம் எனக் கூறினார். இதை ஏற்க திமுக எம்பிக்கள் மறுத்துவிட்டனர். பின்னர் 12 மணிக்கு அவை மீண்டும் கூடிய போது 12.15 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அடுத்ததாக நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. திமுக எம்பிக்களின் டிசர்ட் விவகாரம் நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* ஜெய் ஸ்ரீராம் கோஷம் மட்டும் போடலாமா?
மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கரை எதிர்க்கட்சி எம்பிக்கள் சந்தித்த போது, நாடாளுமன்ற விதிகளின்படி எந்த வாசகமும், பேட்ஜ்ஜும் அணிந்தபடி வரக்கூடாது என வலியுறுத்தினர். அப்போது எதிர்க்கட்சி எம்பிக்கள், ‘‘பாஜ தலைவர்கள் அவர்களின் கட்சி சின்னம் பொறிக்கப்பட்ட பேட்ஜை சட்டையில் குத்திக் கொண்டு வந்திருக்கிறார்கள். சிலர் ஜெய் ஸ்ரீராம் கோஷம் போட்டுள்ளார்கள். மேலும் சிலர் அவர்களின் மதம் தொடர்பான கோஷமிட்டுள்ளார்கள். அப்போதெல்லாம் அவைத்தலைவர் ஆட்சேபனை தெரிவிக்காதது ஏன்?’’ என பதில் கேள்வி எழுப்பினர்.

* சஸ்பெண்ட் செய்தாலும் டிசர்ட் மாற்ற மாட்டோம்
மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் அழைப்பை தொடர்ந்து அவரது அறையில் சந்திக்க, திமுக எம்பிக்கள் தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் சென்றனர். அப்போது, நாடாளுமன்றம் சுமூகமாக செயல்பட ஒத்துழைப்பதாக திமுக உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் உறுதி அளித்தனர்.

அதே சமயம், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அரசு தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பதை திமுக எம்பிக்கள் சுட்டிக் காட்டினர். இதனால், நியாயமான தொகுதி மறுவரையறைக்கான போராட்டத்தின் அடையாளமாக டிசர்ட்டை மாற்ற மாட்டோம் என உறுதியாக கூறிய அவர்கள், தொடர்ந்து டிசர்ட்டில் தான் இருப்போம் என்றும் அதற்காக சஸ்பெண்ட் செய்தாலும் சந்திக்க தயார் என கூறினர். இதன் காரணமாக நேற்று மாநிலங்களவை நாள் முழுவதும் செயல்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

* 349வது விதி கூறுவது என்ன?
நாடாளுமன்ற விதிமுறை 349வது பிரிவு, அவையில் உறுப்பினர்கள் எந்த கொடி, சின்னம் மற்றும் எந்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை காட்ட தடை செய்கிறது. இதன் துணைப்பிரிவுகள், எந்த வகையிலும், பேட்ஜ்களை வெளிக்காட்டுவதோ, அணிந்து வருவதையோ தடுக்கிறது. இந்திய தேசிக் கொடி தவிர வேறெதையும் உறுப்பினர்கள் சட்டையில் அணிந்து வரக்கூடாது என 349வது பிரிவு வலியுறுத்துகிறது. இதன் அடிப்படையிலேயே மக்களவை சபாநாயகர், டிசர்ட்டை மாற்றிக் கொண்டு வருமாறு கூறியதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

The post தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘தமிழ்நாடு போராடும்’ டிசர்ட் அணிந்து நாடாளுமன்றம் வந்த திமுக எம்பிக்கள்: இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: