கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திரா, தனஸ்ரீ தம்பதிக்கு விவாகரத்து

மும்பை: கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திரா சாகல் – தனஸ்ரீ வர்மா தம்பதிக்கு விவாகரத்து வழங்கி குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திரா சாகல் கடந்த 2020ம் ஆண்டு தனஸ்ரீ வர்மாவை திருமணம் செய்து கொண்டார். கடந்த 2022ம் ஆண்டு இருவரும் பிரிந்துவிட்டனர். கடந்த பிப்ரவரி மாதம், இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து கோரி மும்பையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ரூ.4.7 கோடி ஜீவனாம்சம் வழங்க யுஸ்வேந்திரா ஒப்புக் கொண்டார். இந்து திருமண சட்டத்தின் படி, விவாகரத்து கோரும் தம்பதியினர் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் சேர 6 மாத கால அவகாசம் வழங்கப்படும். ஆனால் இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து கோருவதால், 6 மாத காத்திருப்பு காலத்தை ரத்து செய்யக் கோரி இருவரும் குடும்பநல நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் அவர்களது கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதையடுத்து யுஸ்வேந்திரா மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். கடந்த புதன்கிழமை வழக்கை விசாரித்த ஐகோர்ட், தம்பதியினர் ஏற்கனவே பிரிந்து வாழ்வதால் காத்திருப்பு காலம் அவசியமில்லை என தெரிவித்தது. மேலும் யுஸ்வேந்திரா வரும் 22ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி சார்பில் பங்கேற்க உள்ளதால் அதற்கு முன்னதாக வழக்கில் தீர்ப்பளிக்குமாறு குடும்ப நல நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. அதன்படி நேற்று வழக்கை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம், பரஸ்பரமாக இருவரும் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்டு யுஸ்வேந்திரா சாகல் – தனஸ்ரீ வர்மா தம்பதிக்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பு வழங்கியது.

The post கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திரா, தனஸ்ரீ தம்பதிக்கு விவாகரத்து appeared first on Dinakaran.

Related Stories: