கொல்கத்தா: பாலின சமத்துவத்தை பேணும் வகையில் மதுபான பார்களில் பெண்களுக்கு வேலையளிக்கும் வகையில், மேற்குவங்க அரசு புதிய சட்டத்தை அமல்படுத்தி உள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது மாநில சட்டசபை கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்ட நிதி மசோதாவில், பெண்களை மதுபான பார்களில் வேலைக்கு அமர்த்தும் சட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. கிட்டத்தட்ட 116 ஆண்டுகாலமாக இருந்த தடையை, இந்த புதிய சட்டத்தின் மூலம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த முன்மொழிவால், சுற்றுலா துறையில் பாலின சமத்துவத்தை மேம்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மசோதாவை அம்மாநில அமைச்சர் சந்திரிமா பட்டாச்சார்யா தாக்கல் செய்தார்.
அதில், ‘கொல்கத்தா (அப்போது கல்கத்தா) நாட்டின் தலைநகராக செயல்பட்ட காலத்தில், 1909ம் ஆண்டு மேற்குவங்க கலால் சட்டம் ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்டது. இந்த மேற்குவங்க கலால் சட்டத்தில் பாலின பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. அதனை தவிர்க்கும் பொருட்டு, மதுபானக் கடைகளில் பெண்களை வேலைக்கு அமர்த்த அனுமதி அளிக்கப்படுகிறது. இதுவரை நடைமுறையில் இருந்த தடைகள் நீக்கப்படுகிறது. மசோதாவில் உள்ள மேலும் சில விதிகள் இணைக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதைத் தடுக்கும் வகையில், வெல்லம் உள்ளிட்ட பல்வேறு மூலப்பொருட்களின் விநியோகத்தை கண்காணிக்க மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. அதேபோல் தேயிலைத் தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் சிரமங்களை குறைக்கும் வகையில், 1944ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மேற்குவங்க விவசாய வருமான வரிச் சட்டத்தையும் திருத்தப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.
The post பாலின சமத்துவத்தை பேணும் வகையில் மதுபான பார்களில் பெண்களுக்கு வேலை: மேற்குவங்கத்தில் புதிய சட்டம் appeared first on Dinakaran.