பாட்னா: மொபைல் போனை தொடர்ந்து பயன்படுத்தினால் அடுத்த 10 ஆண்டுகளில் உலகம் அழிந்துவிடும் என பீகார் பேரவையில் முதல்வர் நிதிஷ் கூறியதால் ஆளுங்கட்சிக்கும், எதிர்கட்சிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. பீகார் சட்டப் பேரவையில் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் உரையாற்றிக் கொண்டிருந்த போது, எம்எல்ஏ குமார் கிருஷ்ண மோகன் என்பவர், தனது மொபைல் போனைப் பார்த்துக் கொண்டிருந்தார். கேள்வி நேரத்தின் போது இவ்வாறு எம்எல்ஏ நடந்து கொண்டதை பார்த்த முதல்வர் நிதிஷ் குமார், ‘ஏற்கனவே சட்டமன்றத்திற்குள் மொபைல் போன்கள் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. இவ்விசயத்தில் சபாநாயகர் நந்த் கிஷோர் யாதவ், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மொபைல் போனுடன் வருபவர்களை அவையிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று உங்களை (சபாநாயகர்) கேட்டுக் கொள்கிறேன்.
மொபைல் போன்களை அதிகமாக பயன்படுத்துவதால் எதிர்மறையான தாக்கம் தான் ஏற்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால் அடுத்த 10 ஆண்டுகளில் உலகம் அழிந்துவிடும். நீங்கள் (குற்றம்சாட்டப்பட்ட எம்எல்ஏ) ஏன் மொபைல் போனுடன் நிற்கிறீர்கள்? பேசுங்கள்’ என்றார். அதன்பின் குமார் கிருஷ்ண மோகன் பேசினார். மொபைல் போன்களைப் பயன்படுத்துவதால் அடுத்த 10 ஆண்டுகளில் உலகம் அழிந்துவிடும் என்று முதல்வர் கூறியதால் அவையில் புதிய சர்ச்சை வெடித்தது. அப்போது எதிர்கட்சி தலைவராகன தேஜஸ்வி யாதவ் கூறுகையில், ‘பீகாரில் இவ்வளவு பழமைவாத முதல்வர் இருப்பது துரதிர்ஷ்டவசமானது; அவர் கூறிய கருத்துக்கள் மிகவும் கண்டிக்கத்தக்கது. சுற்றுச்சூழல் கண்ணோட்டத்தில் மற்ற மாநிலங்களில் காகிதமில்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. ஆன்லைனில் கேள்விகளை கேட்க எம்எல்ஏக்களை ஊக்கப்படுத்துகிறார்கள்.
எந்தவொரு உறுப்பினரும், அவையில் துணை கேள்வி கேட்க வேண்டும் என்றால், அவர்கள் தங்களது மொபைல் அல்லது டேப்லெட்டைப் பார்க்க வேண்டும். ஆனால் பீகாரில் கணினி கல்வியறிவற்ற முதல்வர் இருக்கிறார். அவர் தொழில்நுட்பம், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரானவராக உள்ளார்’ என்றார். தேஜஸ்வி யாதவின் இந்த கருத்தால் ஆளும்கட்சி கூட்டணிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் நவீன நிர்வாகத்துடன் தொடர்பின்றி முதல்வர் நிதிஷ் குமார் செயல்பட்டு வருகிறாரா? என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்விகளை எழுப்புகின்றனர்.
தேசிய கீதத்தை அவமதித்தாரா நிதிஷ்?
பாட்னாவில் நடந்த விளையாட்டு போட்டி துவக்க நிகழ்வில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கலந்து கொண்டார். மேடையில் தொடக்க நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. அனைவரும் மரியாதை செய்ய முயன்ற போது, அங்கிருந்த முதல்வர் நிதிஷ் குமார் திடீரென தனது இருக்கையில் இருந்து எழுந்து நேராக நடந்து சென்றார். இதனால் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். அங்கிருந்த அதிகாரி ஒருவர் முதல்வரை பின்தொடர விரைந்து சென்றார். மேடைக்கு அருகே நின்றிருந்த சிலரை பார்த்து முதல்வர் நிதிஷ் குமார் கைகுலுக்கினார். பின்னர் சுதாரித்துக் கொண்ட முதல்வர், மீண்டும் மேடைக்கு வந்ததும் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. அப்போது சிரித்துக்கொண்டே நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிலையில் தேசிய கீதத்தை முதல்வர் நிதிஷ்குமார் அவமதித்துவிட்டதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
The post மொபைல் போனை தொடர்ந்து பயன்படுத்தினால் அடுத்த 10 ஆண்டுகளில் உலகம் அழிந்துவிடும்: பேரவையில் முதல்வர் நிதிஷ் கூறிய கருத்தால் சலசலப்பு appeared first on Dinakaran.