வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதால் அம்பலம் டெல்லி ஐகோர்ட் நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது: உச்ச நீதிமன்ற கொலிஜியம் அதிர்ச்சி

* துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவு
* டெல்லி தலைமை நீதிபதி அறிக்கை தாக்கல்

புதுடெல்லி: டெல்லி ஐகோர்ட் நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபற்றி டெல்லி தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற கொலிஜியத்திற்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளார். டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் யஷ்வந்த் வர்மா. உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இருந்து டெல்லி ஐகோர்ட்டுக்கு கடந்த 2021 அக்டோபரில் இடமாற்றம் செய்யப்பட்டார்.

டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயாவுக்கு பிறகு மூத்த நீதிபதியாக நீதிபதி யஷ்வந்த் வர்மா உள்ளார். அதனால் டெல்லி உயர் நீதிமன்ற கொலிஜியத்திலும் இடம் பிடித்துள்ளார். கடந்த 14ம் தேதி ஹோலி பண்டிகையின் போது நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அதிகாரப்பூர்வ டெல்லி இல்லத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து ஏற்பட்டபோது நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது இல்லத்தில் இல்லை. குடும்ப உறுப்பினர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் வந்தனர். அப்போது ஒரு அறையில் கணக்கில் வராத பெரும் தொகை இருப்பதை கண்டுபிடித்தனர். தீயை அணைத்த பின்னர், உயர் போலீஸ் அதிகாரிகள் நீதிபதியின் வீட்டிற்கு வந்து பணத்தை கைப்பற்றி எடுத்து சென்றனர்.

இதுகுறித்த விபரங்கள் ஒன்றிய நீதித்துறை அமைச்சகத்திடம் தெரிவிக்கப்பட்டன. இவ்விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் கவனத்திற்கு ஒன்றிய அரசு கொண்டு சென்றது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையில் கூடிய அவசர கொலீஜியம், குற்றம்சாட்டப்பட்ட நீதிபதி யஷ்வந்த் வர்மாவை மீண்டும் அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்ய பரிந்துரை செய்ய முடிவு செய்தது. மேலும் டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயாவிடம் இந்த விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்ற கொலிஜியம் உத்தரவிட்டது. இந்த சூழலில் நேற்று இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது.

இதுகுறித்து விவாதிக்க உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் நேற்று காலையில் கூடினர். இதனால் வழக்கமான நீதிமன்ற நேரங்களில் கூடும் உச்ச நீதிமன்றத்தின் 12 அமர்வுகள் நேற்று கூடவில்லை. இந்த நிலையில் நீதிபதி யஷ்வந்த் வர்மா நேற்று டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு வரவில்லை. இதுபற்றி கேட்டபோது அவர் விடுமுறையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இதுகுறித்து விசாரணை நடத்தி உச்ச நீதிமன்ற கொலிஜியம் முன்பு அறிக்கை தாக்கல் செய்ததன் அடிப்படையில் உச்ச நீதிமன்ற கொலிஜியம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுகிறது.

* சிக்கியது எவ்வளவு? ரூ.15 கோடியா?
நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் இருந்து சிக்கியது ரூ.15 கோடி என்றும், ரூ.100 கோடி என்றும் தகவல் பரவி உள்ளது. மேலும் பணக்கட்டுகள் வைக்கப்பட்ட அறையில் தான் தீப்பற்றியதாகவும், அதில் பல நோட்டுகட்டுகள் எரிந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

யார் இந்த யஷ்வந்த் வர்மா?
* நீதிபதி யஷ்வந்த் வர்மா 1969ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி அலகாபாத்தில் பிறந்தார். இவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஏ.என்.வர்மாவின் மகன் ஆவார்.
* டெல்லி பல்கலைக்கழகத்தில் உள்ள ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் பி.காம் (ஹானர்ஸ்) படிப்பைப் படித்த அவர், மத்தியப் பிரதேசத்தின் ரேவா பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி பட்டம் பெற்றார்.
* அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞராக 1992ல் பதிவு செய்தார்.
* 2006 முதல் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் சிறப்பு வழக்கறிஞராக இருந்தார்.
* 2012 முதல் 2013 ஆகஸ்ட் வரை உத்தரப் பிரதேச அரசின் தலைமை நிலை வழக்கறிஞராக இருந்தார்.
* அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக 2014 அக்டோபர் 13 அன்று நியமிக்கப்பட்டார்.
* 2016 பிப்ரவரி 1 அன்று நிரந்தர நீதிபதியாகப் பதவியேற்றார்.
* 2021ம் ஆண்டு முதல் டெல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக உள்ளார்.

* மாநிலங்களவையில் விவாதம்
நீதிபதி வீட்டில் இருந்து பணம் மீட்கப்பட்ட பிரச்னை மாநிலங்களவையில் எழுப்பப்பட்டது. காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் இதுகுறித்து கூறுகையில்,’டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் இல்லத்தில் பெரும் அளவிலான பணம் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் செய்தியை பற்றி நாங்கள் படித்தோம். ஏற்கனவே அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் தெரிவித்த சில கருத்துக்கள் தொடர்பாக 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு முன்னர் நோட்டீஸ் சமர்ப்பித்து இருக்கிறோம். எனவே நீதித்துறை பொறுப்புக்கூறலை அதிகரிப்பதற்கான முன்மொழிவைக் கொண்டு வர அரசிற்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்குமாறும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் உடனடியாக வெளிச்சத்திற்கு வராதது தான் என்னைத் தொந்தரவு செய்கிறது. இது போன்ற சம்பவம் ஒரு அரசியல்வாதி, அதிகாரி அல்லது தொழிலதிபருக்கு தொடர்புடையதாக இருந்தால், சம்பந்தப்பட்ட நபர் உடனடியாக குறிவைக்கப்பட்டு இருப்பார். எனவே, முறையான பதில், வெளிப்படையான பொறுப்புக்கூறல் நிச்சயமாக வரும் என்று நான் நம்புகிறேன்’ என்றார். இதுகுறித்து பேசிய அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர்,’ ஆளும்கட்சி, எதிர்கட்சி தலைவர்களை தொடர்பு கொண்டு பணம் பறிமுதல் விவகாரத்தில் உரிய முறையில் விவாதம் நடத்துவது குறித்து ஆலோசிப்பேன்’ என்றார்.

* ஈடி, சிபிஐயை விட தீயணைப்புத்துறை சிறப்பாக செயல்படுகிறது: காங்கிரஸ்
வெறும் இடமாற்றத்தால் பிரச்சினையை மூடிவிட முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் பவன் கேரா கூறுகையில்,’ நீதித்துறையின் மீது நாட்டின் நம்பிக்கையை நிலைநிறுத்துவது முக்கியம். மேலும் நீதிபதி வீட்டில் சிக்கியது யாருடைய பணம் என்பதைக் கண்டுபிடிப்பது முக்கியம். அமலாக்க இயக்குநரகம் மற்றும் சிபிஐயை விட தீயணைப்பு படை சிறப்பாக செயல்படுகிறது. நீதிபதியின் வீட்டில் இருந்து இவ்வளவு பெரிய தொகை மீட்கப்பட்ட விவகாரம் மிகவும் தீவிரமானது.

இந்த விவகாரத்தை வெறும் இடமாற்றத்தால் மூடிமறைக்க முடியாது. நீதிபதி யஷ்வந்த் வர்மா, உன்னாவ் பலாத்கார வழக்கு மற்றும் பல முக்கிய வழக்குகளை விசாரித்து வருகிறார். நீதித்துறையின் மீது நாட்டின் நம்பிக்கையை நிலைநிறுத்த, அது யாருடைய பணம், எதற்காக நீதிபதிக்கு வழங்கப்பட்டது என்பதைக் கண்டுபிடிப்பது முக்கியம். நீதி தேவதையின் கண்களில் உள்ள பட்டையை அகற்றும் அதே வேளையில், சட்டம் குருடல்ல, அனைவரையும் சமமாகப் பார்க்கிறது என்று முன்னாள் தலைமை நீதிபதி ஒருவர் கூறியிருந்தார். இதையும் இந்த வழக்கில் நிரூபிக்க வேண்டும்’ என்றார்.

* நீதிமன்ற விவகாரங்கள் குறித்து கருத்து கூறக்கூடாது: பா.ஜ.
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் இருந்து பணம் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக பாஜ செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறுகையில்,’ நீதிமன்ற விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிக்க கூடாது. இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி விசாரிக்கிறார்’ என்றார். பா.ஜ தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவர் அமித் மாளவியா கூறுகையில்,’ லோக்பால் வழிகாட்டுதலின்படி, ஷிபு சோரன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான சிபிஐ விசாரணையை நீதிபதி யஷ்வந்த்வர்மா நிறுத்திவிட்டார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

* அலகாபாத் உயர் நீதிமன்றம் குப்பைத்தொட்டியா?
நீதிபதி யஷ்வந்த் வர்மாவை மீண்டும் அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை செய்த கொலிஜியம் நடவடிக்கையை அலகாபாத் பார் அசோசேசியன் கடுமையாக எதிர்த்து உள்ளது. இதுதொடர்பாக அலகாபாத் தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,’ தற்போதைய சூழலில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் பற்றாக்குறை உள்ளது. பல ஆண்டுகளாக புதிய நீதிபதிகள் நியமிக்கப்படவில்லை. தகுதியான நபரை தேர்வு செய்வதில் குறைபாடு உள்ளது. இதன்விளைவாக ஊழல் நடக்கிறது. கொலீஜியத்தின் முடிவால் நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். கொலிஜியத்தின் இந்த முடிவு ஒரு தீவிரமான கேள்வியை எழுப்புகிறது. அது அலகாபாத் உயர்நீதிமன்றம் குப்பைத் தொட்டியா? தற்போதைய சூழ்நிலையை ஆராயும்போது இந்த விஷயம் முக்கியமானது. இதனால் தான் நீதித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை குறைகிறது’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

* எங்களுக்கும் அதிர்ச்சியாக உள்ளது: டெல்லி தலைமை நீதிபதி கருத்து
டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா மற்றும் நீதிபதி துஷார் ராவ் கெடேலா அமர்வு முன்பு ஆஜரான மூத்த வழக்கறிஞர் அருண் பரத்வாஜ், நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் பணம் சிக்கியதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து அதிர்ச்சியும், வேதனையும் தெரிவித்தார். இந்த செய்தியால் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்றார். இதையடுத்து தலைமை நீதிபதி டி கே உபாத்யாயா கூறுகையில்,’ நடந்தது பற்றி எங்களுக்கும் தெரியும். நாங்களும் அதிர்ச்சியடைந்துள்ளோம் ‘ என்றார்.

* நீதிபதி வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்படவில்லை: டெல்லி தீயணைப்புத்துறை விளக்கம்
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் மார்ச் 14 அன்று நடந்த தீ விபத்தில் பணம் பறிமுதல் செய்யப்படவில்லை என்று டெல்லி தீயணைப்புத்துறை விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக டெல்லி தீயணைப்புத்துறை தலைவர் அதுல் கார்க் வெளியிட்டுள்ள அறிக்கை: டெல்லி லுட்டியன்ஸ் சாலையில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் இல்லத்தில் மார்ச் 14 அன்று இரவு 11.35 மணியளவில் தீப்பிடித்ததாக கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்தது. உடனடியாக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. இரவு 11.43 மணியளவில் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு சென்றன. ஸ்டேஷனரி மற்றும் வீட்டுப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த ஸ்டோர் அறையில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீ 15 நிமிடங்களில் அணைக்கப்பட்டது. இதில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. விரைவில் தீயை அணைத்த பிறகு, தீ விபத்து குறித்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தோம். அதன்பிறகு, தீயணைப்புத் துறை பணியாளர்கள் குழு அந்த இடத்தை விட்டுச் சென்றது. எங்கள் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் நடவடிக்கையின் போது பணம் எதுவும் கிடைக்கவில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

* இடமாற்றம் மட்டும் தான் தண்டனையா? உச்ச நீதிமன்றம் அவசர விளக்கம்
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் இருந்து பணம் மீட்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் அவரை இடமாற்றம் செய்தது மட்டும் தான் உச்ச நீதிமன்றம் எடுத்த தண்டனையா என்று சமூக ஊடகங்களில் பல கேள்விகள் எழுப்பப்பட்டன. இதுபற்றி உச்ச நீதிமன்றம் சார்பில் நேற்று திடீர் விளக்கம் அளிக்கப்பட்டது. அதன்விவரம்:
1. மார்ச் 20 அன்று உச்ச நீதிமன்ற கொலீஜியம் கூட்டத்திற்கு முன்னதாக டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உள் விசாரணை நடைமுறையை தொடங்கினார். டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நேற்று தலைமை நீதிபதியிடம் அறிக்கை சமர்பித்ததன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
2. நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த சூழலில் நீதிபதி யஷ்வந்த் வர்மா டெல்லி உயர்நீதிமன்றத்தில் இருந்து இடமாற்றம் செய்ய முன்மொழியப்பட்டுள்ளார். ஏனெனில் அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இருப்பது செயல்முறைக்கு இடையூறாக இருக்கலாம். உள்விசாரணை செய்ததற்கும், இடமாற்றம் செய்ததற்கும் எந்தவித தொடர்பும் இல்லை.
3. நீதிபதி வர்மாவை இடமாற்றம் செய்யும் திட்டம் குறித்து டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் பதில்களை உச்ச நீதிமன்ற கொலீஜியம் கோரியுள்ளது. அந்த பதில்களை ஆய்வு செய்த பிறகு, உச்ச நீதிமன்ற கொலீஜியம் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

எப்படி நடவடிக்கை எடுக்கப்படும்?
* நீதிபதிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை கையாள்வதற்கான நடைமுறைகளின் படி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, புகார் பெறப்பட்ட நீதிபதியிடமிருந்து விளக்கம் கேட்பார்.
* அவரால் அளிக்கப்பட்ட விளக்கத்தில் தலைமை நீதிபதிக்கு உடன்பாடு இல்லாத போது, ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய உள்விசாரணைக் குழுவினை அமைக்கலாம்.
* விசாரணைக் குழு என்பது நீதிபதி ஒருவர் நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்படுவதற்கான முதல் படியாகும்.
* விசாரணைக்குழு அறிக்கையில் குற்றம் கண்டுபிடிக்கப்பட்டால் நீதிபதியை ராஜினாமா செய்ய தலைமை நீதிபதி அறிவுறுத்துவார்.
* தலைமை நீதிபதி உத்தரவை நீதிபதி ஏற்காவிட்டால் குறைந்தது 50 எம்பிக்கள் கையெத்திட்டு பதவி நீக்க தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார்கள்.
* அதை தொடர்ந்து நீதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

The post வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதால் அம்பலம் டெல்லி ஐகோர்ட் நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது: உச்ச நீதிமன்ற கொலிஜியம் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: