சிவகாசியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி ஜரூர்: 9 கான்கிரீட் தூண்களை இணைக்கும் பணிகள் நிறைவு

சிவகாசி: சிவகாசியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. தற்போதுவரை 9 கான்கிரீட் தூண்களை இணைக்கும் பணிகள் முடிந்துள்ளது. குட்டி ஜப்பான் அன்று அழைக்கப்படும் சிவகாசி மக்களின் 30 ஆண்டு கால கோரிக்கை சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பதுதான். சிவகாசி மக்களின் கோரிக்கையை ஏற்று சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க ஒன்றிய அரசு ரூ.10 கோடியும், மாநில அரசு ரூ.61 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்தது. மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி ஆடிபெருக்கு அன்று தொடங்கியது. நிர்வாக காரணங்களால் 20 நாட்கள் வரை பணிகள் ஆரம்பிக்கப்படாத நிலை இருந்தது. அதனை தொடர்ந்து பணிகள் தொடங்கிய நாள் முதல் தற்போதுவரை விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இரட்டை பாலம் முதல் சாட்சியாபுரம் மீன் மார்க்கெட் வரை 700 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. 17 கான்கிரீட் தூண்களுடன் அமையும் இந்த பாலத்தில் தற்போதுவரை 17 இடங்களில் கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. கான்கிரீட் தூண்கள் அமைக்கும் இடங்களில் டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் மின் கம்பங்கள் இடமாற்றம் செய்யப்பட்டதால் ரயில்வே மேம்பாலம் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன.

கான்கிரீட் தூண்களை இணைக்கும் பணிகளும் தொடங்கி தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 17 கான்கிரீட் தூண்களில் தற்போதுவரை 9 கான்கிரீட் தூண்கள் இணைக்கப்பட்டுள்ளன. அனைத்து கான்கிரீட் தூண்கள் இணைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பாலம் அமைக்கும் பணிகளை அமைச்சர் தங்கம்தென்னரசு, அசோகன் எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். வேறு எந்த பகுதியிலும் இவ்வளவு வேகமாக ரயில்வே மேம்பால பணி அமைந்தது இல்லை என்று குறிப்பிடும் அளவுக்கு பணிகள் தரமாகவும் வேகமாகவும் அமைக்கப்பட்டு வருகிறது. திட்டமிட்ட காலத்திற்கு முன்னதாகவே பாலம் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிா்பார்க்கப்படுகின்றது.

The post சிவகாசியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி ஜரூர்: 9 கான்கிரீட் தூண்களை இணைக்கும் பணிகள் நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: