இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த சில வாரங்களாக போர் நிறுத்தம் அமலில் இருந்தது. இதனிடையே, போர் நிறுத்தத்தின் 2ம் கட்டத்தை அமல்படுத்த ஹமாஸ் வலியுறுத்தி வந்தது. 2ம் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தப்படி காசாவில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேற வேண்டும். ஆனால், முதற்கட்ட ஒப்பந்தத்தை நீட்டித்து மேலும் சில பணய கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்ய வேண்டுமென இஸ்ரேல் வலியுறுத்தி வந்தது. இதனால், இரு தரப்புக்கும் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் நீடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
ஒப்பந்தத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல மத்தியஸ்தம் செய்ய நாடுகள் முயற்சித்தன. ஆனால், இரு தரப்பும் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கவில்லை. இதனால் மீண்டும் போர் தொடங்கும் சூழ்நிலை உருவானது. இந்த நிலையில், காசா முனையில் இஸ்ரேல் நடத்திய அதிரடி வான்வழி தாக்குதலில், 400க்கும் மேற்பட்டோர் பலியாகினர். வான்வழி தாக்குதலில் கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதால் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வெளியிட்ட பதிவில், ‘காசா மீது செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்கள் வெறும் தொடக்கம் மட்டுமே; இனிமேல் அனைத்து போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளும் குண்டுமழைக்கு மத்தியில் நடைபெறும். ஹமாசை அழிப்பது, அவர்களால் சிறை வைக்கப்பட்ட பணயக்கைதிகளை மீட்பது தான் எங்களது போர் இலக்குகளாக உள்ளன’ என்றார்.
The post காசாவில் 400க்கும் மேற்பட்டோர் பலி; இந்த தாக்குதல் வெறும் தொடக்கமே… இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆவேசம் appeared first on Dinakaran.