துபாய்: ஹார்முஸ் ஜலசந்தியை மீட்க போர்க்கப்பல்களை அனுப்ப சொன்ன அதிபர் டிரம்பின் கோரிக்கையை அதன் நட்பு நாடுகள் நிராகரித்துள்ளன. இது அதிபர் டிரம்புக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதே சமயம், ஹார்முஸ் ஜலசந்தி திறந்தே இருப்பதாகவும், அங்கு எதிரிகளின் கப்பல்களுக்கு மட்டுமே அனுமதியில்லை என்றும் ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் போர் 17வது நாளாக நேற்றும் நீடித்தது. அமெரிக்க ராணுவ தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகள் மீது ஈரான் தொடர்ந்து ஏவுகணை, டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது. ஈரான் ஏவிய டிரோன், துபாய் சர்வதேச விமான நிலையத்தின் அருகே எரிபொருள் டேங்க்கை தாக்கியது. இதனால் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சிறிது நேரம் துபாய் விமான நிலையம் மூடப்பட்டது. தீ அணைக்கப்பட்ட பிறகு மீண்டும் விமானங்கள் புறப்பட்டன. ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில் ஈரான் ஏவுகணை வாகனத்தை தாக்கியதில் ஒருவர் பலியானதாக உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், ஐக்கிய அரபு எமிரேட்சின் முக்கிய எண்ணெய் முனையமான புஜைரா துறைமுகத்தில் ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தியதில் அங்கு தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் ஏற்றுமதி பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. ஹார்முஸ் ஜலசந்தி பகுதியிலும் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் எண்ணெய் கப்பல்கள் போக்குவரத்து சீர்குலைந்துள்ளது. இதன் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது.
அமெரிக்காவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதற்கிடையே, ஈரான் மூடியுள்ள ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல்களுக்கு பாதுகாப்பளிக்க சீனா மற்றும் இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட 7 நட்பு நாடுகளுக்கு அதிபர் டிரம்ப் கடந்த இரு தினங்களுக்கு முன் கோரிக்கை விடுத்தார். இந்த 7 நாடுகளும் அவர்களின் போர்க்கப்பல்களை அனுப்பி ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பானதாக்க உதவுமாறு கூறியிருந்தார். ஆனால், ‘இது எங்கள் போர் அல்ல’ என நட்பு நாடுகள் அனைத்தும் பின்வாங்கி இருக்கின்றன.
ஜப்பானும், ஆஸ்திரேலியாவும், ஜெர்மனியும் தங்களின் போர்க்கப்பல்களை அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை என திட்டவட்டமாக மறுத்துள்ளன. இந்த போரின் நோக்கம் குறித்து அமெரிக்காவும், இஸ்ரேலும் தெளிவுபடுத்த தவறி விட்டதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறி வருகிறது. இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் ஆலோசனை நடத்தி வருவதாக கூறினாலும் போர்க்கப்பல்கள் அனுப்பும் திட்டம் குறித்து யோசிக்கப்படவில்லை என கூறி உள்ளார். அனைத்து தரப்பும் உடனடியாக சண்டையை நிறுத்த வேண்டும் என சீனா ஒதுங்கி உள்ளது. பிரான்ஸ், தென் கொரியா உள்ளிட்ட முக்கிய நாடுகளும் டிரம்புக்கு ஆதரவாக எந்த கருத்தும் கூறவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப், ‘‘ஹார்முஸ் விவகாரத்தில் உதவாவிட்டால் நேட்டோவின் எதிர்காலம் மிக மோசமாக இருக்கும்’’ என மிரட்டினார். அதன் பிறகும் நேட்டோ நாடுகளில் ஒன்றான கிரீஸ் போர்க்கப்பல்களை அனுப்ப முடியாது என கூறி இருக்கிறது. எனவே இந்த விவகாரம் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. எந்த நாடும் வராவிட்டாலும் அமெரிக்கா தனித்து நின்று ஹார்முசை மீட்கும் என டிரம்ப் கூறி உள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தால் எண்ணெய் விநியோகம் தடைபட்டு உலக பொருளாதாரம் ஆட்டம் கண்டு வரும் நிலையில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி நேற்று அளித்த பேட்டியில், ‘‘ஹார்முஸ் ஜலசந்தி திறந்தே இருக்கிறது. அது எதிரிகளுக்கு மட்டும் தான் மூடப்பட்டிருக்கிறது. எங்களுக்கு எதிராக கோழைத்தனமான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் நாடுகளுக்கும் அதன் நேச நாடுகளுக்கும் தான் ஹார்முஸ் மூடப்பட்டிருக்கிறது’’ என்றார்.
* இன்னும் 3 வாரம் போர் நீடிக்கும்
இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் நடவ் ஷோசானி நேற்று அளித்த பேட்டியில், ‘‘ஈரானுடனான போரில், அடுத்த 3 வாரங்களுக்கான விரிவான செயல் திட்டங்களும், அதற்கு அப்பாலும் நீளும் கூடுதல் திட்டங்களும் எங்களிடம் உள்ளன. ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை உள்கட்டமைப்பு, அணுசக்தி நிலையங்கள் மற்றும் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம், இஸ்ரேலுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் ஈரானின் திறனைப் பலவீனப்படுத்துவது மட்டுமே எங்கள் நோக்கம். அவர்களை பலவீனமாக்கி, அனைத்து திறன்களையும் நாங்கள் செயலிழக்க செய்வோம்’’ என்றார். அதே சமயம், அமெரிக்காவும் இஸ்ரேலும் விரும்பும் வரை தாங்களும் போர் புரிய தயாராக இருப்பதாக ஈரான் புரட்சிகர காவல் படை கூறி உள்ளது.
* டிரம்பின் சீன பயணம் தள்ளிப் போக வாய்ப்பு
அதிபர் டிரம்ப் , இம்மாத இறுதியில் சீன பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். முக்கியமான இப்பயணம் தற்போது தள்ளிப் போக வாய்ப்பிருப்பதாக அமெரிக்கா கூறி உள்ளது. இது குறித்து அமெரிக்க கருவூல அமைச்சர் பெசன்ட் நேற்று அளித்த பேட்டியில், ‘‘அதிபர் டிரம்பின் சீன பயணம் திட்டமிட்டபடி நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஆனால் இந்த பயணம் தள்ளிப் போவதற்கும் ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. ஹார்முஸ் விவகாரத்தில் சீனாவுக்கு அழுத்தம் தரவே டிரம்ப் பயணத்தை தள்ளிப் போடுகிறார் என கூறப்படும் செய்திகள் உண்மையில்லை’’ என்றார்.
