15 நாட்களில் 850 பேர் பலியான நிலையில் லெபனானுக்குள் இஸ்ரேல் படைகள் ஊடுருவல்: பதிலடி கொடுக்க ஹிஸ்புல்லாவுக்கு தடை

 

பெய்ரூட்: மத்திய கிழக்கு ஆசியாவில் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினரிடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில் லெபனான் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த 2024ம் ஆண்டில் இஸ்ரேல் – லெபனான் ஆகிய இரு தரப்பிற்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம், இந்த மாத தொடக்கத்தில் முழுமையாக முறிந்தது. அதன் தொடர்ச்சியாக, கடந்த 2ம் தேதியிலிருந்து மோதல்கள் மீண்டும் வெடித்தன. இதன் விளைவாக லெபனான் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, இதுவரை 850 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 2,100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

சுமார் 8,30,000 மக்கள், அதாவது லெபனான் மக்கள் தொகையில் 14 சதவீதம் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்நாட்டிலேயே அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். தற்போதைய சூழலில், நேற்று இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் லெபனான் முழுவதும் உள்ள ஹிஸ்புல்லா நிலைகள் மீது மிகப்பெரிய வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளன. பெய்ரூட் புறநகர்ப் பகுதிகளான ஹாரெட் ஹிரேக் மற்றும் கோபெய்ரி உள்ளிட்ட இடங்களில் உள்ள ரத்வான் படையின் கட்டளை மையங்களை இஸ்ரேல் தகர்த்துள்ளது. இந்த இக்கட்டான நிலையில், லெபனான் பிரதமர் நவாப் சலாம் மற்றும் அதிபர் ஜோசப் அவூன் ஆகியோர் ஹிஸ்புல்லாவின் பதில் ராணுவ நடவடிக்கைகளுக்கு தடை விதித்துள்ளனர்.

ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள லெபனான் அரசு, அங்கு ஆலோசகர்களாக இருக்கும் ஈரானிய புரட்சிகர காவற்படை அதிகாரிகளைக் கைது செய்து நாடு கடத்தவும் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக இஸ்ரேல் தரப்பில் ரான் டெர்மர் மற்றும் டிரம்ப் நிர்வாகத்தின் தூதர் மசாத் பவுலோஸ் ஆகியோர் முன்னிலையில் போர் நிறுத்தத்திற்கான நீண்டகால திட்டம் குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

Related Stories: