அமலாக்கத்துறையின் உள்நோக்கம் கொண்ட அறிக்கையின் அடிப்படையில், டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டுள்ளனர். டாஸ்மாக் தலைமை அலுவலகம் அமைந்துள்ள தாளமுத்து நடராசன் மாளிகையை தடையை மீறி முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. டாஸ்மாக்கில் ரூபாய் ஆயிரம் கோடி ஊழல் என்று மார்ச் 12 ஆம் தேதி ஊடகங்களின் மூலமாக அண்ணாமலை குற்றம் சாட்டினார். அடுத்த நாள் 13 ஆம் தேதி அமலாக்கத்துறை டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்று அறிக்கை வெளியிட்டது.
அந்த அறிக்கையில் எந்த அடிப்படையில் ஊழல் நடைபெற்றது என்பது பற்றி எந்த விவரமும் இல்லை. அந்த வழக்கு விவரங்கள் என்ன ? எந்த ஆண்டுகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டன என்ற விவரத்தை அறிவிக்காமலேயே டாஸ்மாக்கில் பணியாற்றுகிற கடைநிலை ஊழியர் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளின் அடிப்படையில் அமலாக்கத்துறை இந்த குற்றச்சாட்டை கட்டமைத்துள்ளது. டாஸ்மாக்கில் பணியாற்றகிற கடைநிலை ஊழியர் செய்கிற தவறுக்கு அத்துறையின் அமைச்சரை எப்படி பொறுப்பாக்க முடியும் ?
கடந்த டிசம்பர் 2023 இல் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி திண்டுக்கல் டாக்டரிடம் முதல் தவணையாக ரூபாய் 20 லட்சம் லஞ்சமாக பெற்று கையும் களவுமாக பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அமலாக்கத்துறை அதிகாரி செய்த குற்றத்திற்கு அத்துறையின் அமைச்சரான நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றாரா ? ஊருக்கு உபதேசம் செய்யும் அண்ணாமலை இதற்கு பதில் கூறுவாரா ? எனவே, இதுவொரு அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கையாகும். ஏற்கனவே அமலாக்கத்துறையின் அவதூறு குற்றச்சாட்டின் பேரில் 15 மாதங்கள் சிறையில் இருந்து, உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு, வெளியே வந்திருக்கிற அமைச்சர் செந்தில் பாலாஜி மீது, மீண்டும் குறிவைத்து கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தின் முன் நிரூபிப்பேன் என்று தனது நிலையை தெளிவுபடுத்தியிருக்கிறார்.
தேசிய அளவில் பா.ஜ.க., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகியவற்றோடு கூட்டணி வைத்துக் கொண்டு மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இதுவரை பா.ஜ.க. ஆட்சியில் 10 ஆண்டுகளில் அமலாக்கத்துறை பதிவு செய்த 97 சதவிகித வழக்குகளில் 2 சதவிகிதம் தான் தண்டனை பெறப்பட்டுள்ளது. அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் தான் அமலாக்கத்துறை செயல்படுகிறதே தவிர, குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதில் படுதோல்வி அடைந்திருக்கிறது. இதை எதிர்த்து காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடுத்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், டாஸ்மாக் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக போராட்டம் நடத்த பா.ஜ.க.வுக்கு காவல்துறையினர் அனுமதி அளிக்கவில்லை. குறிப்பாக, சென்னையில் போராட்டம் நடத்த வேண்டுமென்றால், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம், வள்ளுவர் கோட்டம் என சில குறிப்பிட்ட இடங்களில் தான் அனுமதி வழங்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியினர் நடத்தும் ஊர்வலங்களுக்கு கூட சில நேரங்களில் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. தடையை மீறி போராட்டம் நடத்தி கைது செய்யபபட்ட சூழலில் அண்ணாமலை, ஊடகங்களில் பேசும் போது, இனிமேல் காவல்துறையினருக்கு அனுமதிக் கடிதம் அளிக்க மாட்டோம், பா.ஜ.க.வுக்கு மரியாதை அளிக்காத காவல்துறையினரை தூங்க விடமாட்டோம் என்று மிரட்டியதோடு, டாஸ்மாக் கடைகளில் பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என்று அண்ணாமலை அறிவித்திருக்கிறார். பிரச்சினைகளை தேடி அதற்காக போராட்டம் நடத்த முற்படுகிற அண்ணாமலை புதுச்சேரி உள்ளிட்ட பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள மதுபானக் கடைகளை மூட போராட்டம் நடத்துவாரா ?
அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தமிழகத்தில் அமலாக்கத்துறையை தூண்டிவிட்டு வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஆற்றல்மிக்க அமைச்சர் செந்தில் பாலாஜியை முடக்க வேண்டுமென்ற நோக்கத்தில் இத்தகைய அடக்குமுறைகள் ஏவிவிடப்படுகிறது. இதை எதிர்கொள்கிற பேராற்றலும், துணிவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு இருக்கிறது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை, இந்தியா கூட்டணி 2019 மக்களவை தேர்தலில் இருந்து கட்டுக்கோப்புடன் கொள்கை உறுதியோடு செயல்பட்டு அனைத்து தேர்தல்களிலும் மக்கள் ஆதரவோடு வெற்றி பெற்று வருகிறது. இந்நிலையில் பா.ஜ.க.வுடன் சேருவதற்கு தமிழகத்தில் எந்த கட்சியும் முன்வராத நிலையில் விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு நாள்தோறும் அண்ணாமலை அவதூறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். தமிழக வெற்றி கழகத்தை பா.ஜ.க. பக்கம் ஈர்ப்பதற்கு அதன் தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமித்ஷாவின் பரிந்துரையின் பேரில் வழங்கப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டின் கள நிலவரத்தை அறிந்த விஜய், நேற்று பா.ஜ.க.வின் டாஸ்மாக் போராட்டத்தை கடுமையான முறையில், மிகமிகத் தரம் தாழ்ந்து இழிவாக விமர்சனம் செய்திருக்கிறார். இதன்மூலம் தமிழகத்தின் அரசியல் அநாகரீகமாக அண்ணாமலை மாறி வருகிறார்.
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக ஒன்றிய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 2005 இல் கொண்டு வரப்பட்ட இத்திட்டத்திற்கான ரூபாய் 2118 கோடி நிதி தராமல் ஒன்றிய பா.ஜ.க. அரசு வஞ்சித்து வருகிறது என தமிழ்நாடு முதலமைச்சர் குற்றம் சாட்டினார். இதுகுறித்து பலமுறை கடிதம் எழுதினார். இதனால், கடந்த நவம்பர் மாதத்திலிருந்து ஐந்து மாதங்களாக 100 நாள் வேலை திட்டத்தில் தொழிலாளர்களுக்கு ஊதியம் தர முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு நிதி வழங்காமல் ஒன்றிய பா.ஜ.க. அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சியில் கடுகளவாவது அக்கறை இருந்தால், ஒன்றிய அரசிடம் பேசி தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை பெற்றுத் தர அண்ணாமலை முயற்சி செய்வாரா ?
தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒன்றிய அரசின் நிதி பங்கீடு 2016-17 இல் 3.41 சதவிகிதமாக இருந்தது, 2024-25 இல் நிதி ஒதுக்கீடு 1.96 சதவிகிதமாக குறைந்திருக்கிறது. இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 4 சதவிகிதத்தையும், மொத்த மக்கள் தொகையில் 6 சதவிகிதத்தையும் பெற்றிருக்கிற தமிழ்நாடு, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 9.21 சதவிகிதப் பங்கை அளிக்கிறது. ஆனால், தமிழகத்திற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு வரிகளின் மூலமாக வழங்குகிற பங்கு வெறும் 4 சதவிகிதம் தான்.
தமிழக விரோத போக்கு காரணமாக பா.ஜ.க. காலூன்ற முடியாத நிலையில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளும், தமிழக அரசின் மக்கள் நலன்சார்ந்த திட்டங்கள் மூலம் மக்களின் பேராதரவை பெற்று வருவதால், அதை சகித்துக் கொள்ள முடியாத அண்ணாமலை, அரசியல் விரோத உணர்ச்சிகளின் காரணமாக அடிக்கடிப் போராட்டங்களை அறிவித்துக் கொண்டிருக்கிறார். போராட்டங்களை தேடி அலைந்து, அதை நடத்தி, ஊடகங்களின் விளம்பர வெளிச்சத்தை அண்ணாமலை பெறலாமே தவிர, தமிழ்நாட்டு மக்களின் ஆதரவை என்றுமே பெற முடியாது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post அண்ணாமலை ஊடகங்களின் விளம்பர வெளிச்சத்தை பெறலாமே தவிர, தமிழ்நாட்டு மக்களின் ஆதரவை பெறமுடியாது: செல்வப்பெருந்தகை! appeared first on Dinakaran.