ஊட்டி: நீலகிரி மலர் கண்காட்சி மற்றும் பழக்கண்காட்சி குழு கூட்டம் ஊட்டியில் உள்ள கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமை வகித்தார். தோட்டக்கலைத்துறை இயக்குநர் குமாரவேல் பாண்டியன் இணைய வழியில் பங்கேற்றார். பின்னர் கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு செய்தியாளர்களிடம் கூறுகையில், 13வது காய்கறி கண்காட்சி கோத்தகிரி நேரு பூங்காவில் மே 3,4 ஆகிய தேதிகளில் நடக்கிறது. 11வது வாசனை திரவிய கண்காட்சி கூடலூரில் மே 9ம் தேதி துவங்கி 11ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
ஊட்டியில் உள்ள அரசு ரோஜா பூங்காவில் 20வது ரோஜா கண்காட்சி மே 10ம் தேதி துவங்கி 12ம் தேதி வரை நடக்கிறது. கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 127வது மலர் கண்காட்சி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மே 16ம் தேதி துவங்கி 21ம் தேதி வரை 6 நாட்கள் நடக்கிறது. குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 65வது பழக்கண்காட்சி மே 23ம் தேதி துவங்கி 25ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. முதல் முறையாக குன்னூர்-மேட்டுபாளையம் சாலையில் அமைந்துள்ள காட்டேரி பூங்காவில் மே 30ம் தேதி துவங்கி ஜூன் 1ம் தேதி வரை முதலாவது மலைப்பயிர்கள் கண்காட்சி நடக்கிறது என்று தெரிவித்தார்.
The post ஊட்டியில் மே 16ல் மலர் கண்காட்சி appeared first on Dinakaran.