நாகப்பட்டினத்தில் செப்டம்பரில் நடக்கிறது இந்திய ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம்: ஏப்.10க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க 18 மாவட்ட இளைஞர்களுக்கு அழைப்பு

நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் செப்டம்பர் மாதம் நடை பெற உள்ள இந்திய ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாமில் பங்கேற்க ஆன்லைன் மூலமாக ஏப்ரல் 10ம்தேதிக்குள் விண்ணப்பிக்க 18 மாவட்ட இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்திருப்பதாவது: இந்திய ராணுவத்திற்கு அக்னிவீர் திட்டத்தின் கீழ் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் நாகப்பட்டினத்தில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது.

இதில் அரியலூர், கன்னியாகுமரி, கரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருவாரூர், விருதுநகர் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 17 வயது முதல் 21 வரை உள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.

பொதுவான பணி, தொழில்நுட்ப பணி, கிளார்க், ஸ்டோர் கீப்பர், டெக்னிக்கல், டிரேட்ஸ் மேன் ஆகிய ராணுவ பணிக்கு 10ம் வகுப்பு, 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில் 8ம்வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வைத்திருப்பவர்கள், அதில் வட்டார கல்வி அலுவலர் அல்லது மாவட்ட கல்வி அலுவலர் சான்றொப்பமிட்டிருக்க வேண்டும். இந்த பணிகளுக்கு www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஏப்ரல் 10ம்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஒருவர் ஏதேனும் இரு பிரிவுகளுக்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம். தற்போது 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்வு முடிவிற்காக காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களை அதே இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் அல்லது நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் நேரிலோ அல்லது தொலைபேசி எண் 04365-299765 வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

The post நாகப்பட்டினத்தில் செப்டம்பரில் நடக்கிறது இந்திய ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம்: ஏப்.10க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க 18 மாவட்ட இளைஞர்களுக்கு அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: