உலக மகளிர் தினத்தை முன்னிட்டு 2000 மாணவிகள் பங்கேற்ற தமிழ்மகள் என்னும் மாபெரும் சொற்போர்: அனிதா அச்சீவர்ஸ் அகாடமி மாணவி ரூ.1 லட்சம் பெற்று முதலிடம்

சென்னை: உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு மேயர் பிரியா ஏற்பாட்டில் சென்னை பெரியார் திடலில் 18 கல்லூரிகளிலிருந்து 2000க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்ற “தமிழ்மகள்” என்னும் மாபெரும் சொற்போரில் கொளத்தூர் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியை சேர்ந்த மாணவி துர்கா முதலிடம் பிடித்து ரூ.1 லட்சம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் பெற்றார்.

உலக மகளிர் தின விழா – 2025” முன்னிட்டு மேயர் பிரியா ஏற்பாட்டில் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற “தமிழ் மகள்”என்னும் மாபெரும் சொற்போரில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு கல்லூரி மாணவிகளுக்கிடையே மாபெரும் சொற்போரில் 1,500க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் திராவிட மாடல் ஆட்சியில் பெண்ணின உயர்வுக்காக ஆற்றிய மகத்தான பணிகளை எடுத்துக் கூறுகின்ற வகையில் 30 திட்டங்கள் அடங்கிய புகைப்படக் கண்காட்சியை பேராசிரியர் பர்வின் சுல்தானா திறந்து வைத்து பார்வையிட்டனர். இச்சொற்போரில் முன்னாள் நீதிபதி செல்வி கே.பி.கே. வாசுகி, முன்னாள் நீதிபதி எஸ்.ஆனந்தி, இஸ்ரோ விஞ்ஞானி கே.தேன்மொழி செல்வி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட தலைப்பில் 3 நிமிடங்கள் சிறப்பாக சொற்போர் ஆற்றிய கொளத்தூர் அனிதா அச்சிவர்ஸ் அகாடமியை சேர்ந்த மாணவி துர்கா முதலிடத்திற்கான ரூ.1 லட்சமும், டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி மாணவி கயல்விழி இரண்டாம் இடத்திற்கான ரூ.75,000மும் மற்றும் காயிதே மில்லத் அரசினர் மகளிர் கல்லூரி மாணவி லிகிதா மூன்றாம் இடத்திற்கான ரூ.50,000 மும் வழங்குவதற்கு தேர்வு செய்து, பரிசுகள், பாராட்டு சான்றுகள் மற்றும் “தமிழ் மகள்” கேடயத்தையும் வழங்கினர்.

இச்சொற்போரில் கலந்து கொண்ட 2000க்கும் மேற்பட்ட மாணவிகள் அனைவருக்கும் பங்கேற்றமைக்கான பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இச்சொற்போரில் முன்னாள் நீதிபதி விமலா, சொற்பொழிவாளர் பாரதி பாஸ்கர் ஆகியோர் பங்கேற்று மாணவிகளை வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.

The post உலக மகளிர் தினத்தை முன்னிட்டு 2000 மாணவிகள் பங்கேற்ற தமிழ்மகள் என்னும் மாபெரும் சொற்போர்: அனிதா அச்சீவர்ஸ் அகாடமி மாணவி ரூ.1 லட்சம் பெற்று முதலிடம் appeared first on Dinakaran.

Related Stories: