மாந்திரீக பூஜை என்றால் என்ன என்று ஓ.பன்னீர்செல்வம் கேட்ட கேள்வியால் பேரவையில் சுவராஸ்யமான விவாதம் நடைபெற்றது. தமிழக சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின் போது திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் (திமுக) பேசுகையில், “திருவள்ளூர் தொகுதியிலேயே இருக்கிற திருவாலங்காடு, வடாரண்யேஸ்வரசுவாமி கோயில் எத்தகைய சிறப்பு வாய்ந்தது என்பதை பற்றி அமைச்சர் நன்றாக விவரித்தார். பஞ்ச சபைகளில் ஒன்றான ரத்தின சபை திருக்கோயில் மாந்திரீக பூஜை நடத்துவதற்கு உண்டான இடம். தமிழ்நாடு முழுவதும் இருக்கக் கூடிய மக்கள் சனிக்கிழமை வந்து மாந்திரீக பூஜை நடத்துகிறார்கள். அதற்கு கோயிலில் சிறிய இடம் தான் இருக்கிறது. சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், பிரதோஷம் போன்ற நாட்களில் இங்கு வரக்கூடிய பக்தர்கள் தங்கக்கூடிய அளவிற்கு தங்கும் வசதி ஏற்படுத்தி தரும் வகையில் விடுதி ஒன்று அமைத்திட வேண்டும்” என்றார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், மகாசிவராத்திரி விழா திருவாலங்காடு, வடாரண்யேஸ்வரசுவாமி திருக்கோயிலில் இந்தாண்டு சிறப்பாக நடத்தப்பட்டது. அதேபோல் முக்தி பெற்ற காரைக்கால் அம்மையாருக்கு சிறப்பு விழா நடத்துவதற்கு ஏற்கனவே சட்டமன்ற அறிவிப்பு செய்திருந்தோம். அந்த விழாவும் இந்த மாதம் நடைபெறுகிறது. திருப்பாச்சூர் திருக்கோயில் குளமானது பஞ்சாயத்திற்கு சொந்தமான குளமாகும். ஆகவே நீங்கள் உள்ளாட்சி அமைப்பின் மூலம் அந்த குளத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்” என்றார்.
வி.ஜி.ராஜேந்திரன்: அமைச்சரின் பதிலுக்கு நன்றி. அவர் தங்கும் விடுதி கட்டித் தரப்படுமா என்பதை சொல்லவில்லை. நிச்சயமாக இந்த பட்ஜெட்டில் அறிவிப்பார் என்று நம்புகிறேன்.
ஓ.பன்னீர்செல்வம் (அதிமுக): உறுப்பினர் விஜி ராஜேந்திரன், அவருடைய கேள்விக்கு பதில் பெற அமைச்சரும் சில விளக்கங்களை கேட்டார். அவர் கேள்வி கேட்கின்ற போது மாந்திரீக பூஜை பற்றி சொன்னார். மாந்திரீக பூஜை என்றால் என்ன என்று என்பதற்கு அமைச்சர் தக்க விளக்கத்தை அளிப்பாரா என்பதை கேட்க விரும்புகிறேன்.
அமைச்சர் சேகர்பாபு: அவரும் ஆன்மீகவாதி. நீண்ட நெடிய படிக்கட்டுகளில் பல திருக்கோயில்களில் அவரது எண்ணங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக சுற்றி சுற்றி வருபவர். அவருக்கு தெரியாதது ஒன்றும் அல்ல. மாந்திரீகம் என்ற ஒரு வார்த்தை இந்த ஆட்சியில் திராவிட மாடல் ஆட்சியில் எங்கும் நடைபெறுவதில்லை. பரிகார பூஜையை தான் அவர் மாந்திரீக பூஜை என்று மாற்றி சொல்லிவிட்டார். பரிகார பூஜை மண்டபம் தான் கேட்டார். அந்த பரிகார பூஜை மண்டபம் ஏற்படுத்தி தரப்படும் என்பதை முன்னாள் முதல்வர், சட்டப்பேரவை உறுப்பினர் பன்னீர்செல்வம், உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு விவாதம் நடந்தது.
* கால்நடைகளை தெருநாய்கள் கடிக்கும் பிரச்னை உரிய தீர்வு காண ஆலோசனை: அமைச்சர் தகவல்
தமிழக சட்டசபையில் 2025-26ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் பின்வருமாறு:
ஈஸ்வரன் (திருச்செங்கோடு): வீதிகளில் சுற்றித்திரியும் ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளை தெருநாய்கள் கடித்து உயிரிழப்பை ஏற்படுத்தி விடுகின்றன. இதற்கு ஒரு தீர்வை காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகராட்சி துறை அமைச்சர் நேரு: இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தடை உத்தரவு போட்டுள்ளது. ஒரு நாயை பிடித்து அதற்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து அதனை பிடித்த இடத்தில் விட வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. ஒருவேளை அந்த நாய் உயிரிழந்தால் அரசு அதிகாரிக்கு சிறை தண்டனை விதிக்கப்படும். இதனால்தான் தெரு நாய்களை பிடிக்க அலுவலர்கள் அஞ்சுகின்றனர். இந்த பிரச்சினை பற்றி நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரும்படி தமிழக எம்.பி.க்களை கேட்டுள்ளேன். இந்த பிரச்சினையை ஒரே நாளில் முடிக்க முடியும். ஆனால் சட்டத்தில் இடமில்லை.
ஈஸ்வரன்: அதேபோல் இழப்பீடும் இந்த விவகாரத்தில் உடனே கிடைப்பதில்லை. அதனையாவது தாமதமின்றி உரிமையாளர்களுக்கு வழங்க அரசு ஆவன செய்ய வேண்டும்.
வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி: இதுபற்றிய பிரச்னை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உடனடி இழப்பீடுகளை கொடுக்க முடியும் என்றாலும், இதற்கான தீர்வை எட்டுவதற்கு அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருகிறோம். விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
The post மாந்திரீக பூஜை என்றால் என்ன? ஓபிஎஸ் கேள்வியால் பேரவையில் சுவாரஸ்யமான விவாதம்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம் appeared first on Dinakaran.