சீட்டுக்காக ஒருபோதும் அணி மாற மாட்டோம் ஒரு தேர்தலில்கூட நிற்காதவரை அடுத்த முதல்வர் என எழுதுவதா? விஜய் மீது திருமாவளவன் தாக்கு

விழுப்புரம்: சீட்டுக்காக அணிமாற மாட்டோம் என்றும், ஒரு தேர்தலில் கூட நிற்காதவரை அடுத்த முதல்வர் என எழுதுவதாகவும் திருமாவளவன் எம்.பி. கண்டனம் தெரிவித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அங்கீகாரம் வெற்றி விழா விழுப்புரம் நகராட்சி திடலில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. பேசியதாவது: யார் புதிய கட்சி தொடங்கினாலும், செல்வாக்கு இருந்தாலும் அவர்களால் விசிகவை சேதப்படுத்திவிட முடியாது. திரைப்பட கவர்ச்சியால் யாராலும் மடை மாற்றி விட முடியாது. பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் ஆகியோரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு என்னுடன் பயணிப்பவர்களை யாரும் ஈர்த்து விடமுடியாது. கட்சி தொடங்கப்பட்டது முதல் எந்த வீழ்ச்சியும், தொய்வுமின்றி விசிக இருப்பதால் நீண்ட நெடிய வரலாறுகளை கொண்ட கட்சியின் தலைவர்களும் விசிகவை வாழ்த்தி வருகின்றனர்.

தற்போது அரசியல் கட்சி தொடங்கியவர்கள் ஒரு தேர்தலுக்கு கூட நிற்கவில்லை, அடுத்த முதல்வர் என ஊடகங்களில் எழுதுகிறார்கள். நான் நடிகராக இருந்திருந்தால் தலித் அல்லாதவராக இருந்திருந்தாலும் அடுத்த முதல்வர் என எழுதி இருப்பார்கள். பெரியார் இயக்கம், திராவிட இயக்கம், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக கூட்டணி ஆட்சி இருக்கும்போது சாதி வெறியர்கள் கொட்ட மடிக்கிறார்கள். இங்கு பாஜ சங்க் பரிவார் கும்பல் ஆட்சிக்கு வந்து விட்டால் பட்டியல் சமூக மக்களின் நிலை என்னவாகும். சாதியவாதத்தை நியாயப்படுத்தக் கூடியவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும்.

2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் கூடுதலான இடங்களில் போட்டியிட வேண்டும். அதற்கான தொகுதிகளை கேட்டு பெற முயற்சிப்போம். அதற்காக சீட்டுக்காக அணி மாறுவோம் என நினைக்க வேண்டாம். திமுகவுடன் தான் இணைந்து தேர்தலை சந்திப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சண்முகம், காங்கிரசை சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ், மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் அப்துல் சமது எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

The post சீட்டுக்காக ஒருபோதும் அணி மாற மாட்டோம் ஒரு தேர்தலில்கூட நிற்காதவரை அடுத்த முதல்வர் என எழுதுவதா? விஜய் மீது திருமாவளவன் தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: