ஹைப்பர் லூப் போக்குவரத்துக்கான சோதனை அமைப்பு முழுவதும் நமது உள்நாட்டு தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக நமது இளம் கண்டுபிடிப்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். தற்பொழுது வளர்ந்து வரும் ஹைப்பர் லூப் போக்குவரத்து தொழில்நுட்பம், இதுவரையிலான சோதனைகளில் நல்ல பலன்கள் வந்துள்ளன. விரைவில் ஹைப்பர் லூப் போக்குவரத்துக்கு இந்தியா தயாராகிவிடும்.
இதுவரை ஒன்றிய அரசின் ரயில்வே அமைச்சகம் ஹைப்பர்லூப் திட்டத்துக்கு நிதி உதவியும் தொழில்நுட்ப உதவியும் வழங்கி வந்தது. தற்போது ஹைப்பர் லூப் திட்டத்தின் எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பம் முழுவதும் சென்னை ஐசிஎப்பில் மேம்படுத்தப்படும். ஐசிஎப் தொழிற்சாலையில் திறமையான வல்லுனர்கள் வந்தே பாரத் அதிவிரைவு ரயில்களுக்கான பெரிய சவாலான அதிக திறனுள்ள எலக்ட்ரானிக்ஸ் அமைப்புகளை திறம்பட மேம்படுத்தியுள்ளனர். ஹைப்பர்லூப் திட்டத்திற்கான எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பமும் ஐசிஎப்பில் மேம்படுத்தப்படும். ஐஐடி சென்னையின் இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கும் அவிஷ்கர் நிறுவனத்துக்கும் பாராட்டுகள். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் கிண்டியில் உள்ள சென்னை ஐஐடி வளாகத்திற்கு வந்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஐடியின் புதிய கண்டுபிடிப்புகளுக்கான மையம் சார்பில் நடந்த கண்காட்சியை பார்வையிட்டு மாணவர்கள் மற்றும் இளம் கண்டுபிடிப்பாளர்களிடையே கலந்துரையாடினார். அப்போது, பிரதமர் மோடி தலைமையில் அனைத்து துறைகளிலும் முன்னணி நாடாக விளங்கும் வகையில் இந்தியா செயல்பட்டு வருகிறது. தரவு அறிவியல், செயற்கை தொழில்நுட்பம் மற்றும் குறைக்கடத்தி (செமி கண்டக்டர்) ஆகிய துறைகளில் நமது இளைஞர்கள் திறமையாக செயல்பட்டு வருகின்றனர்.
உலகிலேயே இந்தியாவில்தான் திறமையான இளைஞர்கள் அதிகம் உள்ளனர். இவர்கள் இந்தியாவை ஒரு வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற பெரிதும் பங்காற்றுவார்கள். இந்தாண்டு இறுதிக்குள் இந்தியாவில் தயாரான முதலாவது குறைக்கடத்தி பயன்பாட்டுக்கு வரும் என்றார். தொடர்ந்து, கண்காட்சியில் இடம்பெற்ற கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு அமைச்சர் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் சென்னை ஐஐடியின் இயக்குனர் காமகோட்டி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
The post ஹைபர் லூப் திட்டத்துக்கான எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பம் ஐ.சி.எப்.பில் மேம்படுத்தப்படும்: ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் appeared first on Dinakaran.