மும்மொழிக்கொள்கையை ஏற்காததால் நிதி தர மறுப்பு தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு தரவேண்டிய ரூ.2,152 கோடியை மாநில அரசே வழங்கும்: இருமொழி கொள்கையை விட்டுத்தர மாட்டோம் அமைச்சர் அறிவிப்பு

சென்னை: பட்ஜெட்டில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருப்பதாவது : பேராசிரியர் அன்பழகன் பெயரால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 2025-26ம் ஆண்டின் அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள் மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிடும் பொருட்டு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 2000 பள்ளிகளுக்கு ரூ.160 கோடியில் கணினி ஆய்வகங்கள் மேம்படுத்தப்படும். அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் பயின்று வரும் பள்ளிகளில் உள்ள 880 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.56 கோடியில் தரம் உயர்த்தப்படும். மேலும் அரசு பள்ளிகளில் 2025-26ம் ஆண்டில் 2678 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் ரூ.65 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

1721 முதுகலை ஆசிரியர்களும் 841 பட்டதாரி ஆசிரியர்களும் நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்படுவார்கள். இதற்கான தேர்வு அறிவிக்கையை ஆசிரியர்கள் தேர்வு வாரியம் விரைவில் வெளியிடும்.கடந்த 2 ஆண்டுகளில் 780 அரசுப்பள்ளி மாணவர்கள் இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களான ஐஐடி, தேசிய சட்டப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட நிறுவனங்களில் சிறப்பிடம் பெற்று சேர்க்கை பெற்றுள்ளனர். மேலும் 12 மாணவர்கள் முழுக் கல்வி உதவித்தொகையுடன் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்று வருகின்றனர்.

நான் முதல்வன் கல்லூரி கனவு திட்டம் மூலம் தமிழ்நாட்டின் அனைத்து மாணவர்களுக்கும் சென்றடைய முயற்சிகள் எடுக்கப்படும். முதற்கட்டமாக மாநிலத்தின் அனைத்து 388 ஊராட்சி ஒன்றியதங்களில் அமைந்துள்ள 500 அரசு பள்ளிகளில் உயர்கல்வி குறித்தான விழிப்புணர்வு மற்றும் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும். இந்த திட்டம் மூலம் குறைந்தது 2000 அரசு பள்ளி மாணவர்கள் இனி ஒவ்வொரு ஆண்டும் அகில இந்திய அளவில் புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து சிகரம் தொடுவார்கள். இதற்கென ரூ.50 கோடி வரவு- செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்படுகிறது.

ஒன்றிய அரசின் புதிய கல்வி கொள்கையினை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாததால், ஏற்கெனவே ஒப்புதல் வழங்கிய நிலையிலும், ரூ.2152 கோடி ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு விடுவிக்காமல் வஞ்சித்துள்ளது. ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு உரிய நிதியை விடுவிக்காவிட்டாலும், மாணவர் நலன் கருதி அரசு பள்ளி மாணவர்களின் கல்வி ஒரு துளியேனும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஆசிரியர்களின் ஊதியம் உள்ளிட்ட அத்திட்டங்களுக்குரிய நிதியை மாநில அரசே தனது சொந்த நிதி ஆதாரங்களில் இருந்து விடுவித்துள்ளது. நெருக்கடியான இந்த சூழலிலும், ரூ.2000 கோடி நிதியினை இழந்தாலும் இருமொழி கொள்கையினை விட்டுத்தர மாட்டோம்.

தொலைதூர மலைப் பகுதியில் வாழ்ந்துவரும் மாணவர்களின் நலன் கருதி, தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் மற்றும் கல்வராயன் மலை, கிருஷ்ணகிரி மாவட்டம் ஜவ்வாது மலை உள்ளிட்ட இங்களிலுள்ள தொலைதூர மலை பகுதிகளில் அமைந்துள்ள 14 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகலாக தரம் உயர்த்தப்படும். கோவை மற்றும் திருச்சியில் மாபெரும் நூலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக சேலம், கடலூர் மற்றும் நெல்லையில் பொதுமக்கள் போட்டித் தேர்வு எழுதிடும் மாணவர்கள் பயன்பெறும் விதமாக தலா ஒரு லட்சம் புத்தகங்கள் மற்றும் மாநாட்டுக்கூட வசதிகளுடன் நூலங்கள் அமைக்கப்படும். இந்த வரவு செலவு திட்ட மதிப்பீட்களில் பள்ளிகல்வி துறைக்கு ரூ.46,767 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

The post மும்மொழிக்கொள்கையை ஏற்காததால் நிதி தர மறுப்பு தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு தரவேண்டிய ரூ.2,152 கோடியை மாநில அரசே வழங்கும்: இருமொழி கொள்கையை விட்டுத்தர மாட்டோம் அமைச்சர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: