கும்மிடிப்பூண்டியில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு பஸ் வசதி வேண்டும்: பேரவையில் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ கோரிக்கை

கும்மிடிப்பூண்டி: 5 ஆயிரம் தொழிலாளர்கள் பயனடையும் வகையில் கும்மிடிப்பூண்டியில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு பேருந்துகள் இயக்க வேண்டும் என்று பேரவையில் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ கோரிக்கை வைத்துள்ளார். சட்டப் பேரவை கூட்டம் கடந்த வாரம் முதல்வர் தலைமையில் நடைபெற்றது. இதில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2025-2026 நிதி நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்தார்.
இந்தநிலையில் நேற்று வழக்கம்போல் பேரவை கூட்டம் நடைபெற்றது.

இதில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், கும்மிடிப்பூண்டி பெத்திகுப்பம் பகுதியில் மெய்க்கால் புறம்போக்கு நிலத்தில் மாநகராட்சி பேருந்து நிலையம் அமைக்க சில ஆண்டுகளுக்கு முன்பு அறிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுநாள்வரை பணிகள் நடைபெறவில்லை என்று சபாநாயகரிடம் எடுத்துரைத்தார். இதற்கு பதிலளித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், பெத்திகுப்பம் பகுதியில் அமைய உள்ள மாநகராட்சி பேருந்து நிலையம் சம்பந்தமாக நிலம் எடுப்பு பிரிவில் ரூ.4 கோடி மாநகராட்சி போக்குவரத்து கழகத்தில் செலுத்த பணம் இல்லாததால் நிலத்தின் தொகையை குறைக்க வேண்டுமென அரசுக்கு அனுப்பப்பட்டது.

அதில் ரூ.2.10 கோடி செலுத்த அரசு உத்தரவிட்டதாக கூறினார். பின்னர் எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பேசுகையில், 4 ஆண்டுகளில் கும்மிடிப்பூண்டி, மாதர்பாக்கம், புதுவாயில், ஆரணி, பெரியபாளையம், மெதிபாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு புதிய பேருந்து, மாநாகராட்சி பேருந்துகள் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார கிராம மக்கள் மற்றும் சிப்காட் பகுதியில் தமிழகத்தில் உள்ள 20 மாவட்டகளைச் சேர்ந்த 5 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

அவர் வெளிமாவட்டத்திற்குச் சென்றால் மூன்று பேருந்துகளை கடந்து, வெளிவட்டச் சாலையில் உள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதற்காக அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் கும்மிடிப்பூண்டியில் இருந்து கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மாநகரப் பேருந்து அதிகபடியாக இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இந்த கோரிக்கையை ஏற்ற அமைச்சர் சிவசங்கர், இதுகுறித்து போக்குவரத்து துறைக்கு மனுவாக கொடுக்கப்பட்டால் போக்குவரத்து கழகத்திலும் ஆலோசித்து வழித்தடங்களை ஆய்வு செய்த பின்னர் கண்டிப்பாக மாநகரப் பேருந்துகள் கும்மிடிப்பூண்டியில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு பேருந்து இயக்கப்படும் என உறுதி அளித்தார். இதில் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ சட்டப்பேரவையில் பேசிய உரைக்காக கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த பல்வேறு பொதுமக்கள் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

The post கும்மிடிப்பூண்டியில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு பஸ் வசதி வேண்டும்: பேரவையில் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: