பருத்திப்பட்டு ஏரியில் மீன்கள் செத்து மிதந்த விவகாரம் நீர்நிலைகளில் நேரடியாக கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஆய்வுக்குப்பின் தாவரவியல் ஆய்வாளர் அறிவுறுத்தல்

ஆவடி: பருத்திப்பட்டு ஏரியில் மீன்கள் கொத்துக்கொத்தாக செத்து மிதந்த விவகாரத்தில், நீர்நிலைகளில் நேரடியாக கழிவுநீர் கலக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாவரவியல் ஆய்வாளரும், சென்னை பல்கலைக்கழக முனைவருமான ஸ்ரீனிவாசன் ஆய்வுக்குப்பின் அறிவுறுத்தியுள்ளார். ஆவடியில் 87.06 ஏக்கர் பரப்பளவு உடைய பருத்திப்பட்டு ஏரி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த 2019ல், நீர்வளத்துறை சார்பில் 28.16 கோடி ரூபாய் மதிப்பில், பசுமை பூங்காவாக மாற்றப்பட்டது.

இந்த ஏரியில் கழிவுநீரகற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆவடி சுற்றுவட்டார பகுதியில் இருந்து பாதாள சாக்கடை இணைப்பு வாயிலாக சேகரிக்கப்படும் கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு இந்த ஏரியில் விடப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 3ம் தேதி முதல் பருத்திப்பட்டு ஏரியில் மீன்கள் செத்து மிதந்து துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதன்படி அங்கு சென்ற ஆவடி மாநகராட்சி அதிகாரிகள், மீன்பிடி ஊழியர்கள் மூலம், நேற்று வரை 11,500 கிலோ இறந்த மீன்களை எடுத்து சேக்காடு குப்பை கிடங்கில் புதைத்தனர். மின்வெட்டு ஏற்பட்டு, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இயங்காதபோது, ஏரியில் கழிவுநீர் பாய்ந்து மீன்கள் இறந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நோய் தொற்று பரவாமல் இருக்க, ஏரியைச் சுற்றி சுண்ணாம்பு கலந்த பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 8ம் தேதி மீன்வளத்துறை அதிகாரிகள் ஏரியில் ஆய்வு செய்தனர். காலநிலை மாற்றம், ஏரி நீரில் அமிலத்தன்மை, காரத்தன்மை சம நிலையில் இல்லாமை, நீரின் அளவை விட மீன்கள் எண்ணிக்கை அதிகரிப்பால் சுவாசிக்க முடியாமை மற்றும் கழிவுநீர் கலப்பு உள்ளிட்டவையால் மீன்கள் இறந்திருக்கலாம் என ஆய்வில் தெரிய வந்தது. இதையடுத்து, மீன்வளத்துறை அறிவுறுத்தலின் பேரில், 2000 கிலோ கிளிஞ்சல் சுண்ணாம்பு ஏரியில் தெளிக்கும் பணி நேற்று நடைபெற்றது.

இதன் மூலம் மீன் இறப்பை கட்டுப்படுத்தலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தநிலையில் தாவரவியல் ஆய்வாளரும், சென்னை பல்கலைக்கழக முனைவருமான ஸ்ரீனிவாசன் பருத்திப்பட்டு ஏரியில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியிருப்பதாவது: ஏரி நீர் முழுவதும் பச்சை நிறமாக காட்சியளிக்கிறது. மூச்சு திணறல் ஏற்பட்டு மீன்கள் இறந்ததாக செய்திகள் வெளியானது. அது உண்மைதான்.

வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் ஏரியில் கலப்பதால் இவ்வாறு நடப்பதற்கு வாய்ப்புள்ளது. ஏரியில் கலக்கும் கழிவுநீரில் உருவாகும் நன்னீர் பாசி, ஏரியில் படர்ந்து, தண்ணீரில் உள்ள உயிர் வாயு முழுவதையும் பயன்படுத்திக்கொள்ளும். இதனால் மீன்களுக்கு சரியாக உயிர் வாயு கிடைக்காமல் மீன்கள் செத்து மிதந்துள்ளன. இதை பயோலஜிக்கல் ஆக்சிஜன் டிமாண்ட் என கூறுவோம். நீரின் மாதிரியை சேகரித்து நுண்ணியல் கருவி வாயிலாக ஆய்வு செய்யும்போது நீரில் என்ன கழிவு கலக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்துவிடும். கோடை காலத்தில் நீர் வற்றும்போது இவ்வாறு நடக்க வாய்ப்புள்ளது.

ஆனால், சில இடங்களில் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் வெளியேறும்போது இவ்வாறு நடக்கும். இதனால், நாம் வளர்த்து வரும் மீன்கள் அனைத்தும் இறந்து விடும். நீர்நிலைகளில் சுத்திகரிக்கப்படாமல் கழிவுநீர் கலக்கக் கூடாது. இதுதான் பிரச்னைக்கு சரியான தீர்வு. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மிகவும் ஆபத்தானது. நீரில் கரிம வளம் அதிகரிக்கும்போது இவ்வாறு நடக்கும். இதை ‘ஆல்கல் ப்ளூம்’ சிவப்பு அலை என்று கூறுவோம். எனவே, நீர்நிலைகளில் நேரடியாக கழிவுநீர் கலப்பதை தடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

 

The post பருத்திப்பட்டு ஏரியில் மீன்கள் செத்து மிதந்த விவகாரம் நீர்நிலைகளில் நேரடியாக கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஆய்வுக்குப்பின் தாவரவியல் ஆய்வாளர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: