பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையத்தில் 18 புதிய கடைகளுக்கு குத்தகை உரிமம்: பேரூராட்சி மன்ற கூட்டத்தில் முடிவு

திருத்தணி: பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையத்தில் கட்டி முடிக்கப்பட்ட 18 கடைகளை சட்ட விதிகளுக்கு உட்பட்டு குத்தகை உரிமம் வழங்க பேரூராட்சி மன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பொதட்டூர்பேட்டை பேரூராட்சி மன்ற அவசரக் கூட்டம் பேரூராட்சி தலைவர் ஏ.ஜி.ரவிச்சந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. பேரூராட்சி துணைத்தலைவர் டி.ஜி.ராம கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் ராஜகுமார் (பொறுப்பு) வரவேற்றார்.

பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையத்தில் பேரூராட்சிக்கு சொந்தமான பழைய கடைகளை அகற்றிவிட்டு, இயக்கம் மற்றும் பராமரிப்பு திட்டத்தின் கீழ் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் 18 கடை அறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மேலும், பேருந்து நிலைய மேற்கூரை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கடை அறைகளை ஏற்கனவே கடைகள் வைத்து வியாபாரம் செய்து வந்த வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று புதிய கடைகள் குத்தகை உரிமம் வழங்க பேரூராட்சி தலைவர் ஏஜி.ரவிச்சந்திரன் மற்றும் கவுன்சிலர்கள் கூட்டத்தில் வலியுறுத்தினார்.

இருப்பினும் அரசின் விதிகளுக்கு உட்பட்டு புதிதாக பொது ஏலம் நடத்தி கடை அறைகள் குத்தகை உரிமம் வழங்க வேண்டும் என்று செயல் அலுவலர் விளக்கினார். இதனையடுத்து, சட்ட விதிகளுக்கு உட்பட்டு கடை அறைகள் குத்தகை உரிமம் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள், இளநிலை உதவியாளர் முருகவேல், கணினி இயக்குபவர் தணிகைவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையத்தில் 18 புதிய கடைகளுக்கு குத்தகை உரிமம்: பேரூராட்சி மன்ற கூட்டத்தில் முடிவு appeared first on Dinakaran.

Related Stories: