மகளிர் உரிமை தொகை திட்டத்தை தமிழ்நாட்டிலிருந்து காப்பி அடித்துதான் டெல்லியில் பாஜ ஆட்சியை கைப்பற்றியது: திருச்சி சிவா பேச்சு

பொன்னேரி: பொன்னேரியில் முதல்வர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. விழாவிற்கு அமைச்சர் சா.மு.நாசர் தலைமை தாங்கினார். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வல்லூர் ரமேஷ்ராஜ் முன்னிலை வகித்தார். இதில், சிறப்பு அழைப்பாளராக திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா கலந்துகொண்டு பேசியதாவது: தற்போதையை சூழலில் தமிழ்நாடு அரசியல் வானில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. ஒன்றியத்தை ஆண்டு வரும் பாஜ மாநிலங்களில் மெல்ல ஊடுருவி ஆக்கிரமித்து கொண்டது. மேலும், தங்களுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி வெற்றி பெற்றது.

எதிர்கட்சி வெற்றி பெற்றால் உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கைப்பற்றி வருகிறது. வடக்கில் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், இவர்களது சூழ்ச்சிக்கு வணங்காத மாநிலமாக தமிழ்நாடு அமைந்துள்ளது. ஒரு காலத்தில் அரசு உதவிக்காக தாலுகா அலுவலகத்தில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால், இன்றோ மாதம் பிறந்தால் மகளிர் உரிமை தொகை என்ற பெயரில் பெண்களுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் 1000 ரூபாய் சென்று சேர்கிறது. 1.25 கோடி பெண்கள் மகளிர் உரிமை தொகை பெற்று வருகின்றனர்.

இந்த திட்டத்தை தமிழ்நாட்டிடம் இருந்து காப்பி அடித்துதான் டெல்லியில் பாஜ ஆட்சியை கைப்பற்றி உள்ளது. தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் பள்ளிக்கூடங்களாக உள்ளன. ஆனால், உத்தரபிரதேசத்தில் 27,500 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அவர்கள் பயிலும் இந்தியை படிக்க வேண்டும் என நம்மை வற்புறுத்துகிறார்கள். காலை உணவு திட்டத்தை அரியானா உள்பட பல வட மாநிலங்களில் நடைமுறைப்படுத்த தொடங்கி உள்ளனர்.

10 ஆண்டுகள் கழித்து 2035ல் உயர்கல்வியில் சேர்பவர்களின் விழுக்காடு 50 ஆக வேண்டும் என ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் 2025லேயே 48 விழுக்காடாக உள்ளது. இந்தியாவிலேயே 740 மருத்துவ கல்லூரிகள் உள்ள நிலையில் அதில் 74 மருத்துவ கல்லூரிகளுடன் அதிக மருத்துவ கல்லூரிகள் உள்ள மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ளவர்களே வியக்கும் வகையில், தமிழ்நாடு மருத்துவர்கள் சிறந்து விளங்கி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள புகழ் பெற்ற சிறந்த மருத்துவர்கள் நீட் படிக்கவில்லை. சந்திராயன் 1 மயில்சாமி, சந்திராயன் 2 ஆராய்ச்சிக்குழு தலைவர் நாராயணன், சந்திராயன் 3 வீரமுத்துவேல், ஆதித்யா 1 நிகார் சாஜி, அக்னி 5 சங்கரி என இவர்கள் அனைவருமே அரசுப்பள்ளியில் தமிழ்வழி கல்வியில் பயின்றவர்கள். இவர்களில் யாருக்கும் இந்தியும், சமஸ்கிருதமும் தெரியாது.

இந்தி தெரியாததால் நாங்கள் யாரும் வீண் போகவில்லை. இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலாளர் பாஸ்கர் சுந்தரம், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், அவைத்தலைவர் பகலவன், சி.எச்.சேகர், அன்புவாணன் உள்ளிட்ட நிர்வாகிகள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

The post மகளிர் உரிமை தொகை திட்டத்தை தமிழ்நாட்டிலிருந்து காப்பி அடித்துதான் டெல்லியில் பாஜ ஆட்சியை கைப்பற்றியது: திருச்சி சிவா பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: