பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட அண்ணாநகர் சிறுமிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு: 4 வாரத்தில் வழங்க ஐகோர்ட் உத்தரவு

மாதவரம்: சென்னை அண்ணா நகரில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 லட்ச ரூபாய் இடைக்கால இழப்பீட்டை 4 வாரங்களில் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து, புகார் அளிக்கச் சென்ற பெற்றோரை, அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசார் தாக்கியது தொடர்பாக, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்ததுடன் சென்னை பெருநகர காவல் இணை ஆணையர் சரோஜ் குமார் தாக்கூர் தலைமையில் ஆவடி சரக சட்டம்- ஒழுங்கு துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் மாநகர வடக்கு துணை ஆணையர் பிருந்தா அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உத்தரவிட்டது.

இந்த குழு, தனது விசாரணை அறிக்கையை வாரந்தோறும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில், சிறுமிக்கு இழப்பீடு வழங்குவது குறித்து உயர் நீதிமன்றம் முடிவெக்குமாறும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் தரப்பில் இழப்பீடு கோரி மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஏற்கனவே ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க இருப்பதாகவும் கூறி அதற்கான அரசாணையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதனை பதிவு செய்த நீதிபதிகள், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட அண்ணா நகர் சிறுமிக்கு இடைக்கால இழப்பீடாக 3 லட்சம் ரூபாயை 4 வாரத்தில் வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

The post பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட அண்ணாநகர் சிறுமிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு: 4 வாரத்தில் வழங்க ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: