இந்த கடிதத்தை திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள் அடங்கிய குழு நேரில் சென்று வழங்கி வருகிறது. அந்த வகையில், ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தயாநிதி மாறன் எம்.பி. ஆகியோர் சந்தித்து அழைப்பு விடுத்தனர். ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சி தலைவர் பல்லா சீனிவாசராவ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோரை தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, வில்சன் எம்.பி. ஆகியோர் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
மேலும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் சிறப்பு அதிகாரி வெங்கட கிருஷ்ணாவை திமுக எம்.பி. வில்சன் சந்தித்து கடிதத்தை வழங்கினார். இதேபோல் கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோரை தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி, அப்துல்லா எம்.பி. ஆகியோர் சந்தித்து அழைப்பு விடுத்தனர். மேற்கு வங்காள எம்.பி. டெரிக் ஓ பிரையனை டாக்டர் கனிமொழி சோமு எம்.பி. சந்தித்து கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். தொடர்ந்து நேற்று முன்தினம் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் கனிமொழி, ஆ.ராசா, என்.ஆர்.இளங்கோ எம்.பி., அருண் நேரு உள்ளிட்ட எம்பிக்கள் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். புதுடெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. கட்சி மேலிடத்திடம் பேசிய பின்னர் இந்த கூட்டத்தில் பங்கேற்பதாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்தார்.
இதற்கிடையில் கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் சிரோமணி அகாலி தளம் பங்கேற்பதாக நேற்று முன்தினம் அறிவித்தது. கர்நாடகா சார்பில் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பங்கேற்பார் என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், நாடாளுமன்ற எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் அடங்கிய குழு நேற்று கேரளா சென்று அம்மாநில முதல்வர் பினராய் விஜயனை சந்தித்து சென்னையில் வரும் 22ம் தேதி அன்று நடைபெறும் தொகுதி மறுவரையறை குறித்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த அழைப்பை நேரில் வழங்கினர்.
The post தொகுதி மறுவரையறை குறித்த கூட்டத்தில் பங்கேற்க கேரள முதல்வருக்கு அழைப்பு: அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி சென்று சந்தித்தனர் appeared first on Dinakaran.