மெட்ரோ ரயில் நீட்டிப்புக்கான விரிவான திட்ட அறிக்கை; ஒன்றிய அரசின் பங்களிப்பினை பெறுவதற்கு விரைவில் அனுப்பப்படும்

பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: கோவை அவினாசி சாலை மற்றும் சத்தியமங்கலம் சாலை வழித்தடங்களில் ரூ.10,740 கோடியிலும், மதுரை திருமங்கலம் மற்றும் ஒத்தக்கடை பகுதிகளை இணைக்கும் விதமாக ரூ.11,368 கோடியில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கென தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கைகள் ஒன்றிய அரசின் மூலதன பங்களிப்பு பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஒன்றிய அரசின் அனுமதி கிடைக்கவுடன் இந்த இரு நகரங்களிலும் மெட்ரோ ரயில் அமைக்கப்படுவதற்கான பணி தொடங்கப்படும்.

சென்னை மெட்ரோ ரயில் வழித்தடத்தை சென்னை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரையிலான 15.46 கி.மீ. தூரத்திற்கு ரூ.9335 கோடியிலும், கோயம்பேடு முதல் ஆவடி வழியாக பட்டாபிராம் வரையிலான 21.76 கி.மீ. தூரத்திற்கு ரூ.9744 கோடியிலும், பூந்தமல்லியிலிருந்து திருப்பெரும்புதூர் வழியாக சுங்குவார்சத்திரம் வரையிலான 27.9 கி.மீ. தூரத்திற்கு ரூ.8779 கோடியிலும் நீட்டித்திடும் வகையில் விரிவான திட்ட அறிக்கைகள் பெறப்பட்டுள்ளன. இவ்விரிவான திட்ட அறிக்கைகள் ஒன்றிய அரசின் மூலதனப் பங்களிப்பினை பெறுவதற்காக விரைவில் அனுப்பப்படும்.

தாம்பரம் முதல் வேளச்சேரி வழியாக கிண்டி வரை 21 கி.மீ. தூரத்திற்கும், கலங்கரை விளக்கத்திலிருந்து உயர் நீதிமன்றம் வரை 6 கி.மீ. தூரத்திற்கும் மெட்ரோ ரயில் வழித்தடம் நீட்டிப்பு செய்வதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்படும். டெல்லி-மீரட் நகரங்களுக்கிடையே மித அதிவேக ரயில் போக்குவரத்தை உருவாக்கி இயக்கப்படுவதைப் போன்று மண்டல விரைவு போக்குவரத்து அமைப்பு ஒன்றினை தமிழ்நாட்டிலும் ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும். மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இயங்கும் மித அதிவேக ரயில்வே அமைப்பினை சென்னை – செங்கல்பட்டு- திண்டிவனம்- விழுப்புரம்(167 கி.மீ), சென்னை – காஞ்சிபுரம்- வேலூர் (140 கி.மீ), கோவை – திருப்பூர்- ஈரோடு, சேலம்(185 கி.மீ) ஆகிய வழித்தடங்களில் உருவாக்கிட சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் விரிவான் சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post மெட்ரோ ரயில் நீட்டிப்புக்கான விரிவான திட்ட அறிக்கை; ஒன்றிய அரசின் பங்களிப்பினை பெறுவதற்கு விரைவில் அனுப்பப்படும் appeared first on Dinakaran.

Related Stories: