மழைநீர் தேங்கிய வயலில் பருத்தி செடிகளை மீட்கும் வழிமுறைகள்

*விவசாயிகளுக்கு ஆலோசனை

நீடாமங்கலம் : மழைநீர் தேங்கிய வயலில் பருத்தி செடிகளை மீட்பதற்கான வழிமுறைகள் குறித்து நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய தொழில் நுட்ப வல்லுநர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பெய்த கனமழையில் பருத்தி செடிகள் வயலில் தண்ணீர் தேங்கியது.

இதனால் பருத்தி செடிகள் அழுகி விடும் என்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து, திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் இயக்க முனைவர் கருணாகரன், முனைவர் பிரபாகரன் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் பெரியார் ராமசாமி ஆகியோர் விவசாயிகளுக்கு வழங்கியுள்ள ஆலோசனை வருமாறு:

பருத்தியானது வறட்சியை தாங்கி கொள்ளும். ஆனால் அதிக மழை அல்லது தொடர்ந்து அதிகளவு நீர் பாய்ச்சுவதாலோ ஏற்படும் நீர் தேக்கத்தை தாங்காது. பூக்கள் மற்றும் காய்கள் கொட்ட ஆரம்பிக்கும். எனவே தற்போது மழையினால் வயலில் தேங்கி உள்ள நீரை நல்ல வடிகால் வசதி செய்து மழை நீரை வெளியேற்ற வேண்டும். மழை நீரை வடித்த பின்பு ஒரு சதவீதம் அளவில் ஆல் 19 (19:19:19) என்ற காம்ப்ளக்ஸ் உரம் அல்லது ஒரு சதவீதம் பொட்டாசியம் நைட்ரேட் உரத்தை இலை வழியாக தெளிக்க வேண்டும்.

மேலும் பருத்தி செடி தெளிந்து வரவில்லையெனில் தழைச்சத்திற்காக யூரியாவை மேலுரமாக வீரிய ஒட்டு ரகங்களுக்கு ஏக்கருக்கு 35 கிலோ, மற்றும் ஒட்டு ரகங்களுக்கு ஏக்கருக்கு 23 கிலோ என்ற அளவிலும் மழை நின்ற பின் இட்டு மழை நீர் தேங்கிய பருத்தி வயலை மீட்டு கொண்டு வரலாம். மேலும் பயிர் நன்கு தெளிந்த பின்பு பருத்தியில் பூ மற்றும் சப்பைகள் உதிர்வை நிவர்த்தி செய்ய பருத்தி பிளஸ் என்ற நுண்சத்து வளர்ச்சி ஊக்கியை பயன்படுத்தலாம்.

பூக்கும் நிலையிலும் சப்பைகள் உருவாகும் தருணத்திலும், 2 முறை பருத்தி பிளஸ் தெளிக்கலாம். ஒரு ஏக்கருக்கு 2.5 கிலோ பருத்தி பிளஸ்சை கைத்தெளிப்பான் கொண்டு 200 லிட்டர் நல்ல தண்ணீரில் கலந்து பருத்தி செடியின் இலைகள் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும். மேற்கூறிய வழிமுறைகளை கடைப்பிடித்து பருத்தி விவசாயிகள் பயன் பெறலாம் என்றனர்.

The post மழைநீர் தேங்கிய வயலில் பருத்தி செடிகளை மீட்கும் வழிமுறைகள் appeared first on Dinakaran.

Related Stories: