ஊட்டி : ஊட்டி அருகே உள்ள சூட்டிங்மட்டம் பகுதியில் பூத்துள்ள ‘ரோடோடென்ட்ரான்’ மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நாடுகளில் காணப்படும் மரங்கள் மற்றும் மலர் செடிகள் அதிகளவு காணப்படுகின்றன. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வெளிநாடுகளில் இருந்து பல்வேறு மரங்கள் மற்றும் தாவரங்களை ஊட்டிக்கு கொண்டு வந்து பயிரிட்டனர்.
ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் நிலவும் காலநிலை இங்கும் நிலவுவதால், அந்த நாடுகளில் காணப்படும் பல்வேறு வகையான மரங்கள், தாவரங்கள் மற்றும் மலர் செடிகள் அதிகளவு இங்கு கொண்டு வந்து நடவு செய்யப்பட்டன.
அதே சமயம் நீலகிரி மாவட்டத்திற்கு உரிய சில தாவரங்கள் மற்றும் மரங்களும் உள்ளன. சதுப்பு நிலங்கள் மற்றும் மலைகளில் காணப்படும் இந்த மரங்களில் அவ்வப்போது சில மலர்கள் பூத்து காணப்படும். குறிப்பாக, தொட்டபெட்டா மற்றும் அவலாஞ்சி போன்ற மலைப்பகுதிகளில் ‘ரோடோடென்ட்ரான்’ மரங்கள் அதிக அளவு காணப்படுகின்றன.
இந்த மரங்களில் பனிக்காலமான டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை அடர் சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் பூக்கள் பூத்து காணப்படும். தற்போது இவை ஊட்டி – கூடலூர் சாலையில் சூட்டிங்மட்டம் சுற்று வட்டார வனப்பகுதிகள், சாலையோரங்களில் பூத்துகுலுங்கின்றன.
இவை பார்ப்பதற்கு ரோஜா மலர்களைப் போன்று காட்சியளிப்பதால் இதனை இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பது மட்டும் இன்றி அதனை புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.
