தூத்துக்குடி மாநகராட்சி பெண் ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

*மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்

தூத்துக்குடி : உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி பெண் ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி பரிசு வழங்கினார்.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சியில் பணியாற்றும் பெண் ஊழியர்கள், பெண் மாமன்ற உறுப்பினர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவிற்கு ஆணையர் பிரியங்கா தலைமை வகித்தார். உதவி பொறியாளர் அனுசவுந்தர்யா வரவேற்றார்.

மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பேசுகையில், ஆண்களும், பெண்களும் சமம் என்ற நிலையை கடந்து 60 உறுப்பினர்களை கொண்ட தூத்துக்குடி மாநகராட்சியில் 32 பெண் கவுன்சிலர்கள் உள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் விடியல் பயணம், மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண் திட்டம் என பல திட்டங்கள் பெண்களுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது.

எதிர்கால தலைமுறையினர் நலன் கருதி பணியாற்றி வருகிறோம். ஒரு பெண் இல்லாமல் ஆண் வாழ முடியாது. ஆனால் ஆண் இல்லாமல் பெண்ணால் சாதிக்க முடியும். எந்த பணியை செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்கிறோமோ அந்த பணிகளில் உறுதியாகவும் மன தைரியத்தோடு இருந்தால் சாதிக்கலாம். பல்வேறு இடையூறுகள் வரத்தான் செய்யும். அதையும் எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும், என்றார்.

நிகழ்ச்சியில் பெண்கள் ஆரோக்கியம் குறித்து ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் செல்வசுந்தர வினோஜின், நிதி மேம்பாடு பற்றி வங்கி மேலாளர் ரத்தினவள்ளி, பெண்களுக்கான சட்டங்கள் குறித்து சிவிஜா ஆகியோர் பேசினர்.

விழாவில் மண்டல தலைவர்கள் கலைச்செல்வி, அன்னலட்சுமி, நகர்நல அலுவலர் சங்கர்மணி, நகரமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளார்கள் முனீர்அகமது, ராஜேஷ்கண்ணா, சுதாதார அலுவலர்கள் ஹரிகணேஷ், ராஜசேகர், கவுரி, இளநிலை உதவி பொறியாளர்கள் ராஜவி நித்யகல்யாணி, ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகரன், ஜேஸ்பர் ஞானமார்ட்டின் உள்பட அரசுத்துறை அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். சுகாதார ஆய்வாளர் அழகுலட்சுமி நன்றி கூறினார்.

Related Stories: