பழங்குடியின சாதி சான்றிதழ் கேட்டு போராட்டம்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பூம்பூம்காரன் கொட்டாய் கிராமத்தில் வசிக்கும் மக்கள், பள்ளி, கல்லூரிகளில் பயிலும் தங்களது குழந்தைகளுக்கு பழங்குடியின சாதிச் சான்றிதழ் வழங்க கோரி நேற்று வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியும், தேர்தல் புறக்கணிக்க போவதாக பேனர்கள் வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஊர்கவுண்டர் பாபு(45) மற்றும் கிராம மக்கள் கூறியதாவது:

காட்டிநாயனப்பள்ளி, பூம்பூம் மாட்டுக்காரன் கொட்டாய், காவேரிப்பட்டணம் அருகே சவுளுர் பாலாஜி நகர் மற்றும் தர்மபுரி மாவட்டம் அனுமந்தபுரம் ஆகிய பகுதிகளில் ஆதி பழங்குடி மக்கள் (பூம்பூம் மாட்டுக்காரர்கள்) 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம்.

எங்களுக்கு எஸ்டி பிரிவில் சாதி சான்றிதழ் வழங்க கோரி பல ஆண்டுகளாக மனு அளித்து வருகிறோம். இருந்த போதிலும் சான்றிதழ் வழங்கப்படவில்லை. ஏற்கனவே எங்களது சாதியை சேர்ந்தவர்கள் திண்டிவனம், விழுப்புரம், திருவண்ணாமலை, மதுரை, திருச்சி, நாகை, கடலூர் உட்பட 15 மாவட்டங்களில் எஸ்டி சான்றிதழ்கள் பெற்றுள்ளனர். இதனை மேற்கோள் காட்டியும் அலுவலர்கள் தர மறுக்கின்றனர்.

சாதி சான்றிதழ் இல்லாமல் பள்ளி மாணவ, மாணவிகள் 12ம் வகுப்பிற்கு பிறகு மேற்படிப்பு படிக்க முடியாமல் கல்வியை பாதியில் கைவிடும் நிலை தொடர்கதையாக உள்ளது. தற்போது கூட, எங்கள் கிராமத்தில் 25 மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல், கூலி வேலைக்கு செல்கின்றனர்.

எங்கள் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் தகுதி பெற்ற வாக்காளர்களாக உள்ளனர். நாங்கள் யாரும் வாக்களிக்க போவதில்லை. தற்போது கல்வி பயிலும் 60 குழந்தைகளுக்கு உடனடியாக எஸ்டி பிரிவில் சாதிச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: