ஊட்டி, மார்ச் 13: கோடையில் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க விவசாயிகளுக்கு பிளாஸ்டிக் கிணறுகள் தற்போது கை கொடுத்து வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி மூன்று மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். தொடர்ந்து அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வடகிழக்கு பருவ மழை பெய்யும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக குறித்த சமயத்தில் பருவமழை பெய்வதில்லை. சில சமயங்களில் பருவமழை பொய்த்தவிடுகிறது. சில சமயங்களில் காலம் தவறி பெய்கிறது. கடந்த ஆண்டு குறித்த சமயத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கி நான்கு மாதங்கள் வரை பெய்தது. அதேபோல், வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவிற்கு பெய்தது.
எனினும், கோடையில் மழை பெய்யாத சமயங்களில் மலை பாங்கான பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் விவசாயிகளுக்கு பெரும் சிக்கல் ஏற்படுகிறது. இதனால், பெரும்பாலான விவசாயிகள் தங்களது தோட்டங்களில் தற்போது பிளாஸ்டிக் கிணறுகளை உருவாக்கியுள்ளனர். இந்த பிளாஸ்டிக் கிணறுகளில் தண்ணீர் நிரப்பி, அதிலிருந்து தண்ணீர் எடுத்து மைக்ரோ ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். இதன் மூலம் தண்ணீர் சேமிக்கப்படுகிறது. மேலும், பிளாஸ்டிக் கிணறுகளில் உள்ள தண்ணீர் பூமிக்குள் செல்லாமல் பல நாட்கள் உள்ள நிலையில், ஒரு முறை லாரிகளில் வாங்கி நிரப்பப்படும் தண்ணீரை கொண்டு பல நாட்கள் தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுகின்றனர்.
The post கோடையில் நீலகிரி விவசாயிகளுக்கு கை கொடுக்கும் பிளாஸ்டிக் கிணறுகள் appeared first on Dinakaran.