செங்கம் : செங்கம் அடுத்த மேல்செங்கம் காவல் நிலைய தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் தொரப்பாடி கிராமத்தை சேர்ந்த சீனிவாசன்(51) செங்கம் அடுத்த மேல் செங்கம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்தார். இவர் கடந்த ஓராண்டுக்கு முன் சாலை விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று மீண்டும் பணியில் சேர்ந்தார்.
இருப்பினும் உடல் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மேல் செங்கம் காவல் நிலையத்திற்கு பணிக்கு வரவில்லை என தெரிகிறது. தொடர்ந்து உடல் நல பாதிப்பால் விடுப்பிலிருந்து பணிக்கு வருவது மீண்டும் விடுப்பு எடுப்பது போன்ற நிலையில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்து சீனிவாசன் வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.
தொரப்பாடி கிராம நீர் நிலையில் உள்ள மரத்தில் தலைமை காவலர் சீனிவாசன் தூக்கிட்டு சடலமாக கிடந்துள்ளார். இதை அவ்வழியாக சென்ற மாடு மேய்ப்பவர்கள் பார்த்து பாய்ச்சல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த பாய்ச்சல் சப்இன்ஸ்பெக்டர் சக்திவேல் சடலத்தை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதுகுறித்து மேல்செங்கம் இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பிரேத பரிசோதனைக்கு பின் உயிரிழந்த சீனிவாசனின் சடலத்தை குடும்பத்தினரிடம் ஒப்படைத்து நேற்று மாலை சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. உயிரிழந்த தலைமை காவலர் சீனிவாசனுக்கு மனைவி ஜெயக்கொடி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
The post செங்கம் அடுத்த மேல்செங்கம் காவல் நிலைய தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.
